பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சி.ஏ.ஏ சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (14-03-24) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சி.ஏ.ஏ சட்டத்தை கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பல முறை கூறியிருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை, போதிய அவகாசம் எடுத்து கொள்ளலாம். சி.ஏ.ஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. பிரிவினையின் காரணமாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் தங்கி, மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு வர முடிவு செய்தவர்களுக்கான சட்டம் இது.
மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வதற்கான இறையாண்மை உரிமை இது. அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். எனவே, சி.ஏ.ஏ சட்டம் திரும்பப் பெறப்படாது. அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்று இந்தியா கூட்டணிக்கே தெரியும். பா.ஜ.க.வும் மோடி தலைமையிலான அரசும், சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதை ரத்து செய்வதில் சாத்தியமில்லை. இதை ரத்து செய்ய விரும்புவோருக்கு இடம் கிடைக்காமல் இருக்க நாடு முழுவதும் இது குறித்த விழிப்புணர்வு செய்வோம். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. ஒன்று சொல்லி இன்னொன்றைச் செய்த வரலாறு அவர்களுக்கு உண்டு.
சி.ஏ.ஏ குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாகவே சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை. எனவே, சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை” என்று கூறினார்.