Skip to main content

‘இது எங்க ஏரியா...’; எச்சரித்த சீனா - என்ட்ரி கொடுத்த அமித்ஷா!

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

amit shah arunachal pradesh visit related issue between china and india

 

சமீபத்தில் இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களை சொந்தம் கொண்டாடும் வகையில் 'தெற்கு திபெத்' எனக் குறிப்பிட்டு சீனா பெயர் மாற்றம் செய்திருந்தது.

 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று இந்தியா- சீனா எல்லையில் உள்ள கிபித்து கிராமத்தில் வைப்ரன்ட் வில்லேஜஸ் என்ற திட்டத்தைத் தொடங்குவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு சீனா தரப்பில் இருந்து அமித்ஷாவின் இந்த பயணத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்தது. மேலும் அமித்ஷாவின் அருணாச்சல பிரதேசம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டி ஒன்றில், “ஜாங்னான் சீனாவின் ஒரு பகுதியாகும். இங்கு இந்திய அதிகாரிகள் வருகை தருவது என்பது சீனாவின் இறையாண்மையை மீறும் செயலாகும். இது எல்லையில் நிலவும் அமைதியான சூழலுக்கு உகந்தது அல்ல'' என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

 

இருப்பினும் அமித்ஷா திட்டமிட்டபடி அங்கு சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித்ஷா அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது" என்று கூறினார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், "சீனா தெரிவித்துள்ள கருத்துகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்திய தலைவர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு செல்வதை போலவே அருணாச்சல பிரதேசத்துக்கு வழக்கம்போல் செல்வார்கள். அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாத பகுதியாகவும்  இருக்கும். இதுபோன்று சீனா எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றதுடன், இது போன்ற கருத்துகள் உண்மைத் தன்மையை எந்த விதத்திலும் மாற்றிவிடாது" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் போலி வீடியோ விவகாரம்; காங்கிரஸ் முதல்வருக்கு சம்மன்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Summons the Congress Chief Minister on Amit Shah's fake video affair

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ‘மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளை ரத்து செய்வோம்’ என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அந்த வீடியோவை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அமித்ஷா பேசியதாக கூறப்படும் அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையினர் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்று கண்டறியப்பட்டது. மேலும், அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Summons the Congress Chief Minister on Amit Shah's fake video affair

இதற்கிடையே, அமித்ஷாவின் போலி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரிந்ததாக கூறி தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்த் மின்னனு உபகரணங்களையும் மே 1ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் போது கொண்டு வர வேண்டும் என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளது. 

மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.