Skip to main content

'இந்தியா முழுவதும் எனது வீடுதான்' - ராகுல் காந்தி எம்.பி.

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

mm

 

ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.

 

இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.

 

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு எம்.பி பதவி எப்போது வழங்கப்படும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்திருந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக மக்களவைச் செயலகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தியின் எம்.பி பதவி கிடைத்தது.

 

அதேபோல் ராகுல் காந்திக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான அன்றே நாடாளுமன்ற சபாநாயகருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கே, ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்ட துக்ளக் லேன் இல்லத்தை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட துக்ளக் லேன் இல்லம் மீண்டும் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது 'இந்தியா முழுவதும் எனது வீடுதான்' எனப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்