Skip to main content

யூ.கே.ஜி படிக்கும் குழந்தைக்கு டாக்டர் பட்டம்; பல்கலைக்கழகத்துக்கு குவிந்து வரும் பாராட்டு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Accumulating praise for the university for Ph.D. for a child studying UKG in kerala

கேரள மாநிலம், திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பியூஸ் பால். இந்நிலையில், பிரியா தனது நீண்ட நாள் கனவான ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டத்தை பெறுவதற்காக, இருஞ்சாலக்குடா பகுதியில் உள்ள கிறிஸ்து கல்லூரியில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்தார். அவரது ஆய்வு 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நீடித்தது. 

இதனையடுத்து, பிரியா தனது ஆய்வறிக்கையை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அவர் அளித்த ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, பிரியா முனைவர் பட்டம் பெற தகுதியானார்.

இந்த சூழ்நிலையில், கர்ப்பமாக இருந்த பிரியா பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, பெண் குழந்தையை பெற்றெடுத்து பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவர் முனைவர் பட்டத்தை பெற முடியாமல் போனது. இதையடுத்து, டாக்டட் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்ட நாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை அவருடைய மகளிடம் வழங்க வேண்டும் என பிரியாவின் குடும்பத்தினர் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைத்தனர். 

அவர்கள் அளித்து வந்த கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, பிரியாவின் டாக்டர் பட்டத்தை, யூ.கே.ஜி படித்துவரும் அவரது மகள் ஆண்ட்ரியா பெற இருக்கிறார். தாயின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக யூ.கே.ஜி படிக்கும் குழந்தைக்கு டாக்டர் வழங்க ஒப்புதல் அளித்த பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.