குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். மருத்துவமனைகள், பேருந்துகள் என 22 இடங்களில் வெடித்த குண்டுகளினால் 56 பேர் பலியாகினர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இரண்டு இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை.
இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத இயக்கம், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனைத்தொடந்து இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 78 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தநிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 8 ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்ட 78 பேரில் 49 பேரை குற்றவாளியாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து இன்று சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 49 பேருக்கும் இன்று தண்டனையை அறிவித்துள்ளது. 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த குற்றவாளிகளில் 48 பேருக்கு 2.85 லட்சம் அபராதமும், ஆயுத சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் ஒருவருக்கு 2.88 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆயுத சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தவிர குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் இழப்பீடும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் இழப்பீடும் வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.