Skip to main content

டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆற்றில் குதித்த மாணவர்கள்... முரண்டுபிடிக்கும் அதிகாரிகள்... 

Published on 26/07/2018 | Edited on 26/07/2018

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பணிகொண்டான்விடுதி ஊராட்சியில் கல்லணை கால்வாய் ஓரமாக முன்அறிவிப்பு ஏதுமின்றி திடீரென இரு டாஸ்மாக் கடைகளை கடந்த ஜூலை 7ந் தேதி திறந்தார்கள். அந்த பகுதியில் மாணவ, மாணவிகள் அதிகம் செல்லும் பகுதி என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் முதல் டாஸ்மாக் நிர்வாகம் வரை மனு அளித்தும் அந்த மனுக்களை தூக்கிவீசிவிட்டு கடைகள் திறக்கப்பட்டதால் 9 ந் தேதி காலை  மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்ட சாலை மறியல் போராட்டம் நடந்தது.


 

protest

 


சுமார் 3 மணி நேரம் நடந்த சாலைமறியல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் போராடிய மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாக ஒப்புதல் அளித்து எழுதிக் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. டாஸ்மாக் கடைகள் அகற்றுவது தொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் சென்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் அந்த கோப்பு பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் வைத்திலிங்கம் எம்.பி க்கு வேண்டிய நபர்களான மாஜி மாவட்ட பொருளாளர் மதியழகன் மகன் ரமேஷ், மற்றும் அ.தி.மு.க பிரமுகர்கள் தாமரைச்செல்வன், ரவி ஆகியோர் அனுமதி இல்லாத பார் நடத்துவதால் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மறுப்பதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

 

 


அதனால் நிரந்தரமாக கடையை மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி 4 கிராம மக்களுடன் மாணவர்களும் மீண்டும் போராட்டம்  நடத்துவதாக அறிவித்தனர்.  மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பணிகொண்டான்விடுதி, மேலஊரணிபுரம், கீழஊரணிபுரம் மற்றும் சிவவிடுதி கிராமத்தைச் சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள்  கிளை செயலாளர்கள்  சி.மதியழகன்,  எம்.மார்க்கண்டன், பிரதிநிதிகள் எம்.சேகர், ஆர்.கார்த்திகேயன், ஆ.ஜெயக்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் பெண் உறுப்பினர்களும் தங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதுடன் 500 க்கும் மேற்பட்டோர் தங்களின் அடைப்படை கட்சி உறுப்பினர் அட்டையையும், தாங்கள் அணிந்து வந்த வேஷ்டி, புடவைகளையும் 26/07/2018 அன்று நடைபெறும் மதுபான கடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சாலையில் தீ வைத்து கொழுத்துவோம் என்றும் அறிவித்தனர்.

 
இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 26 ந் தேதி காலை ஒரு டாஸ்மாக்  கடை பூட்டப்படுவதாகவும் மற்றொரு கடைக்கு கால அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் போராட்டக்குழுவிடம் பேசப்பட்டது. ஆனால் மாணவர்கள், விவசாயிகளின் நலன் கருதி இரு கடைகளையும் பூட்டிவிட்டு வந்தால் போராட்டம் கைவிடப்படும் என்று பதில் கூறினார்கள். அதனால் மாணவர்கள், விவசாயிகள் கூடிவிடாத அளவிற்கு போலிசாரை கொண்டு வந்து குவித்தனர். ஆனால் அதையும் கடந்து மாணவர்கள் பள்ளி சீருடையுடன் போராட்டக்களத்திற்கு வந்து குவிந்துவிட விவசாயிகளும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

 
அப்போது அங்கு வந்த அதிகாரிகள் முதலில் பூட்டுவதாக சொன்ன கடையையும் திறந்து வைத்துவிட்டு பிறகு பூட்டுவதாக சொன்னதுடன் போராட்டத்தில் இருந்தவர்களை கைது செய்தனர். அதனால் மாணவர்கள் எங்களையும் கைது செய்யுங்கள் என்று முன்னால் செல்ல மாணவர்களை விட்டுவிட்டு பெற்றோர்களை கைது செய்ததால் பல மாணவர்கள் ஆற்றில் குதித்தனர். அவர்களை பொதுமக்களும் போலிசாரும் கரை ஏற்றினார்கள்.

 

 

 
ஆனாலும் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக இல்லை. கைது செய்யப்பட்டவர்களை மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். எத்தனை முறை கைது செய்தாலும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர் போராட்டக்குழுவினர். மாணவர்களும் சாராயக்கடைக்கு எதிராக பள்ளி செல்வதையும் நிறுத்த தயாராக இருக்கிறோம் என்றனர்.
மாணவர்கள் நலனைவிட டாஸ்மாக் கடைகள் மீதுதான் அதிக பற்று கொண்டுள்ளனர் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும். 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.