Skip to main content

ஒருநாள் இந்தியா குப்பைக்கு அடியில் மூழ்கிப்போகும்! - உச்சநீதிமன்றம் அதிருப்தி

Published on 28/03/2018 | Edited on 28/03/2018

ஒருநாள் குப்பைமேடுகளுக்கு அடியில் இந்தியா முழுவதுமாக மூடிப்போகும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Garbage

திடக்கழிவு மேலாண்மை மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் தொடர்பான பொதுநல வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.பி.லோகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது வழக்கு குறித்து பேசிய நீதிபதிகள், ‘நாங்கள் ஒவ்வொரு முறையும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எந்தவிதமான அசைவுகளும் இல்லாத இடத்தில் உத்தரவுகள் வழங்கி யாருக்கு என்ன பிரயோஜனம்? இங்கு குவிந்துகொண்டிருக்கும் குப்பைகளுக்குக் கீழ் ஒருநாள் இந்தியா மூழ்கிப்போகும்’ என அதிருப்தி தெரிவித்தனர். 

 

மேலும், உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜிபூரில் உள்ள குப்பைமேடு ஒருநாள் குதுப்மினார் உயரத்திற்கு வந்துவிடும். விமானங்கள் மோதிவிடாமல் இருப்பதற்காக சிவப்பு எச்சரிக்கை விளக்குகளை வைக்கவேண்டி வரும் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூன்று மாதத்திற்குள் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக முறையான திட்டத்தை வகுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதோடு, ஹரியானா, ஜார்க்கண்ட், மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகங்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்து எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்