கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர். நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து சென்று கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது மலர்களை தூவும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மீது விமானப்படை விமானங்கள் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.