Skip to main content

செத்துப்போக அனுமதி தாருங்கள்! - குஜராத் அரசிடம் கெஞ்சும் 5,000 விவசாயிகள்

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

‘சட்டவிரோதமாக விவசாய நிலங்களை கையகப்படுத்தி, எங்களை தீவிரவாதிகளைப் போல நடத்துவதற்குப் பதிலாக செத்துப்போக அனுமதி தாருங்கள்’ என ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

 

Farmers


‘குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நீண்டகாலமாக விவசாயம் செய்துவந்த விவசாய நிலங்களை, குஜராத் மாநில அரசின் உதவியோடு குஜராத் மாநில மின்சார வாரியம் சமீபத்தில் கையகப்படுத்தியது. இதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த விவசாயிகளை காவல்துறையைப் பயன்படுத்தி விரட்டியடித்தது மாநில அரசு. அமைதியான முறையில் அறவழி போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுவதும், தடியடி நடத்துவதும், வாரக்கணக்காக 144 தடை உத்தரவு பிறப்பிப்பதும் என போராடுவதற்கான உரிமைகூட மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாங்கள் விவசாயிகளாகவே செத்துப்போகிறோம்; அனுமதி தாருங்கள்’ என உருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது அந்தக் கடிதம். 

 

பாவ்நகரின் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தின் நகல்கள், குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் குஜராத் மாநில முதல்வர் என அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 12 விவசாய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 5 ஆயிரத்து 259 பேர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

‘நிலம் கையகப்படுத்தியதில் ‘சட்டவிரோதம்’ நிகழ்ந்திருக்கும் நிலையில், அதைத் தட்டிக்கேட்க எங்களுக்கு உரிமையில்லாமல் தீவிரவாதிகளைப்போல நடத்தப்படுகிறோம். எங்கள் உரிமைகள் காக்கப்படாது என்பீர்களானால், ராணுவத்தை அனுப்பி எங்களை சுட்டுக்கொல்லுங்கள்’ என எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்திற்கு விடையாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மீட்டுத்தர வேண்டும். விவசாயத்தை விட வேறெதுவும் அத்தியாவசியமற்றது என்பதை அரசு உணரவேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்