சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் மரண தண்டனை விதிப்பதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கான வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
ஜம்முவின் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யபட்டது மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.வால் 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது என நாடு முழுவதும் சிறுமிகளின் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என மத்திய மகளிர் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பான பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் மனு அளித்திருந்த மத்திய அரசு, ‘12 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் மீதான பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு, அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்கும் வகையில் போக்ஸோ சட்டத்தில் சட்டத்திருத்தம் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன’ என தெரிவித்திருந்தது. இதையடுத்து, இதுதொடர்பான வழக்கு வரும் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.