Skip to main content

மருதநாயகம் உடலை வெள்ளைக்காரன் நான்கு துண்டுகளாக வெட்டி அடக்கம் செய்தது ஏன்? - சுதந்திர போராட்ட வரலாறு பகிரும் ரத்னகுமார்

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து பல்வேறு விஷயங்களை நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மருதநாயகம் பிள்ளை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக முதல் சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தவர் பூலித்தேவன்; முதல் உயிர்ப்பலி கொடுத்தவர் அழகு முத்துக்கோன். அவர்கள் வரிசையில் வந்தவர்தான் கான்சாகிப் என்ற மருதநாயகம் பிள்ளை. பிரிட்டிஷ்காரர்களுக்கு ஊழியம் செய்து அவர்களால் வளர்க்கப்பட்ட மருதநாயகம் பிள்ளை, ஒருகட்டத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகவே திரும்பிவிடுகிறார். மருதநாயகம் பிள்ளையிடம் ஏதோ மாந்திரீக சக்தி இருக்கிறது என்று நினைத்து அவரைப் பார்த்து வெள்ளையர்களே பயந்துவிட்டனர்.

 

யாரும் செய்ய முடியாத பல செயல்களை போர்க்களத்தில் அவர் எளிதாக செய்தார். துப்பாக்கி குண்டு பாய்ந்தும் சாகாதவர் மருதநாயகம் பிள்ளை. மூன்று முறை தூக்கில் போட்டும் அவர் உயிர் போகவில்லை. அவரை தூக்கில் போடும்போது மரம் முறிந்து விழுந்ததாக வெள்ளைக்காரன் வரலாற்றில் பதிவு செய்துள்ளான். அடுத்த முறை தூக்கில் போடும்போது அவரை சோதனை செய்துள்ளார்கள். புஜத்தில் ஏதோ தாயத்து கட்டியிருந்தாராம். அதை அறுத்துவிட்டு தூக்கில் போடுகையில் உயிர் பிரிந்துவிட்டது. மீண்டும் உயிர் பெற்றுவந்துவிடுவார் என்று நினைத்து அவர் உடலை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு வெவ்வேறு இடங்களில் புதைத்தனர். அந்த அளவிற்கு வீரமானவர் மருதநாயகம் பிள்ளை.