Skip to main content

தமிழ்நாட்டைப் போலவே தமிழர்கள் இங்கும் சாதிவாரியாகப் பிரிந்திருக்கிறார்கள்... - 'காலா' வசனகர்த்தா மகிழ்நன் பகிரும் தாராவி வாழ்க்கை  

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

காலா... ரஜினிகாந்த் நடித்து, ரஞ்சித் இயக்கி, தனுஷ் தயாரித்திருந்த இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்டது. எப்பொழுதும் ரஜினி படங்கள், அவருக்காக மட்டுமே கவனிக்கப்படும். இந்த முறை அதையும்தாண்டி படம் பேசிய அரசியலுக்காகவும் பேசப்பட்டது. படத்தில் இருப்பது யார் பேசும் அரசியல் என்பதில் தொடங்கி நானா படேகர் பாத்திரம் யார் என்பது வரை பல விவாதங்கள் நடந்து அடங்கியிருக்கும் நிலையில் ஆதவன் தீட்சன்யா, ரஞ்சித்துடன் இணைந்து ‘காலா’ படத்தின் வசனங்களை எழுதியுள்ள மகிழ்நனிடம் பேசினோம். அவர், மும்பை தாராவியில் பிறந்து வளர்ந்த நெல்லைக்காரர்.
 

magizhnan



தாராவியில் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கிறது, உங்களுக்கு எப்படியிருந்தது?

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தாராவியில்தான். பப்ளிக் டாய்லெட், ஓபன் டாய்லெட், மழை நேரத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வருதல், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, சேர், சகதி இப்படிப்பட்ட அனுபவங்கள் கூடிய வாழ்க்கைதான் தாராவி. ஆனால் எங்கள் வாழ்க்கை ரொம்ப கொண்டாட்டமாக இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது. எங்க வீட்டுக்குள்ள தண்ணீர் வருவதோ, இல்லை வீட்டுக்குள்ள தண்ணீர் ஒழுகுறதோ, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுறதோ எங்களுக்கு கஷ்டமாயில்ல. நாங்க மழைக்கு பயமில்லாமல் ஆடுவோம், விளையாடுவோம். அது ரொம்ப மகிழ்ச்சியான வாழ்க்கைதான். நான் படிச்சது எல்லாமே தாராவிக்கு  உள்ளேதான். 10ஆம் வகுப்பு வரை தாராவிதான் உலகம். நான் படித்த பள்ளியின் பெயர் காமராஜர் உயர்நிலை பள்ளி. அந்தப் பள்ளிக்கூடம் தாராவியில் உள்ளது. பள்ளிக்கூடம், வீடு, சின்னச் சின்ன மைதானம்... சின்ன வயதிலிருந்தே இதுதான் எங்க தாராவி. அதன் பிறகு காலேஜ் என்று வரும்போதுதான் வெளிய வந்தேன். அங்கே 11, 12 வகுப்புகளே காலேஜ் தான். அப்போதுதான் முதன்முதலாக தாராவிக்கு வெளியே உள்ள உலகத்தை அனுபவித்தோம். அதுவரைக்கும் தாராவிதான்.

 

 


சென்னைக்கு வந்து 7 வருடம் ஆனது. 'நம்மள பத்தி ஏன் யாரும் பேசமாட்டறங்க, நம்மள பத்தி பேச வேண்டும் என்றால் நாமதான் பேசணும் என்று தோன்றியது, அதனால் சினிமாவில் சேரணும்னு சென்னை வந்தேன். சென்னைக்கு வந்து பார்த்தால் ஒரு சப்ரைஸ். ‘மெட்ராஸ்’ படம் ரீலிசாகும்போது சென்னையில் இருந்தேன். ‘மெட்ராஸ்’ படம் பார்த்தபோது எனக்கு ஒரு ஆனந்தக்கண்ணீர். அந்த படம் பேசுன மொழி, அந்த படம் காண்பித்த அட்மாஸ்பியர் எல்லாம் எங்களைப் பற்றி பேசியதுபோல் இருந்தது. நம்ம நினைக்கிறத யாரோ ஒருத்தவங்க பேசிக்கிட்டு இருக்காங்க என்று தோனுச்சு. ரஞ்சித்தை சந்திக்கும் முன் கொஞ்ச நாள் பேசி இருக்கிறேன். என்றாலும் அந்தப் படம் அவர் மீதான பயங்கரமான அன்பும், ஈடுபாடும் கொடுத்தது. இப்போதும் எனக்கு தூக்கம் வரல அல்லது சோர்வாக இருந்தால் கேட்கக் கூடிய ஒரு பாட்டு ‘எங்க ஊரு மெட்ராஸ்’ பாட்டுதான். 

  with rajini



வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தாராவிக்கு 'ஸ்லம் டூர்' (slum tour) என்ற பெயரில் அழைத்து வந்து காட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இன்னும் அது நடக்கிறதா?

ஆம், நிறைய பேரு வருவாங்க. அரைக்கால் பேண்ட் போட்டுக் கொண்டு, கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு வருவார்கள். தாராவிக்குள்ளேயே டூர். டூர் என்றால் தாராவியில் இருக்கிற இடங்களை, குடிசைகளை, வீடுகளை, கடைகளை, தெருவிலேயே வாழும் மக்களைப் பார்ப்பார்கள். அவங்க ஏன் தாராவி வருகிறார்கள் என்ற கேள்வி இருந்தது. இப்பொழுது புரிகிறது, எங்களைப் பார்த்து பாவம் இவர்கள் என்று நினைத்து, பேசி தங்கள் கருணை உள்ளத்துக்கு தீனி போட வரலாம். அல்லது, இப்படிப்பட்ட  சூழ்நிலையில் இவர்களே மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது நாம் ஏன் இருக்கக்கூடாது என்று சுயஆறுதல் தேடிக்கொள்வார்கள். ஆனால், நாங்கள் சொல்ல விரும்புவது, 'எங்களைப் பார்க்க வராதீர்கள், நாங்கள் கண்காட்சிப் பொருள்கள் அல்ல, இது சுற்றுலா தளம் அல்ல'.

 

 


நாட்டில் ஏன் ஏழைகள் இருக்கிறார்கள் என்று கேள்வி வந்து இந்தியாவில் இருக்கிற அமைச்சர்கள், பிரதமர் எல்லாம் தாராவிக்கு டூர் வந்தார்கள் என்றால் காரணத்தை உணர்ந்து மாற்றம் செய்தால் டூர் வருவதற்கு ஒரு அர்த்தம் இருக்கு. ஒரு சில அரசியல்வாதிகள்  இங்க வந்து பார்த்து இருப்பார்கள். ஆனால் அவர்களும் வந்து உட்கார்ந்து பேசி பழகி இருக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து கூட மிகக்குறைவாகத்தான் வந்துருக்காங்க, அதுதான் வருத்தமாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் பேந்தர்ஸ்போன்ற அமைப்புகள்தான் அங்க வேலை பார்த்து இருக்கிறார்கள். அதனால் டூர் வருபவர்கள் எங்களை வேடிக்கை பார்க்க வரக் கூடாது.

  tharavi



தாராவியில் தமிழர்கள் எந்தெந்தத் தொழில்களில் அதிகமாக இருக்கிறார்கள்? 

எல்லாவிதமான தொழில்களும் தாராவியில் இருக்கு. வாட்ச்க்கு பக்கில் போடுவதில் தொடங்கி லெதர் பேக், பர்ஸ் தயாரிப்பது என பல தொழில்கள். இங்க இருக்கும் திருநெல்வேலி அல்வா தொடங்கி எல்லா பொருள்களும் தாராவியில் கிடைக்கும். தமிழர்கள் அந்த எல்லா தொழில்களிலும் இருக்கிறார்கள்.

 

 


தாராவியில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அதிமாக இருக்கிறார்களே... என்ன தொடர்பு?

திருநெல்வேலியிருந்து சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வருகிறார்கள் அல்லவா, அதுபோலத்தான் தாராவியிலும். தாராவியை இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் எக்ஸ்டென்சன் என்று சொல்லலாம். வருஷம் முழுவதும் உழைத்து சேமித்து வைக்கிற பணத்தை ஊருக்கு வந்து அவங்க திருவிழாவில் செலவு செய்வார்கள். இப்போது இது கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் வருடாவருடம் ஊருக்கு சென்று வருகிறார்கள்.

  tharavi overview



தாராவியில் தமிழர்களின் அரசியல் ஈடுபாடு எப்படி இருக்கிறது? மக்கள் பிரதிநிநிகளாக வந்திருக்கிறார்களா?

போன தேர்தலில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக அவ்வப்போது ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளனர். தமிழர்கள் எங்கு போனாலும் அவங்க கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் எப்படி சாதி வாரியாக பிரிந்து இருக்கிறார்களோ, அதைப் போலவே தாராவியிலும் பிரிந்து இருக்கிறார்கள். 90 ஃபீட்ல ஒரு சாதி, க்ராஸ் ரோட்ல ஒரு சாதி, கோலிவாடால ஒரு சாதின்னு இருக்காங்க. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சாதியிலிருந்தும்  நான்கு பேர் நிற்பார்கள். இருக்கிற 40 ஓட்டுகளையும் பிரித்துவிடுவார்கள். இந்த வேலையை எல்லா சாதிக்காரார்களும் செய்வார்கள். தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருப்பதில் ரொம்ப உறுதியாக இருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. ஒற்றுமையாக அணி திரட்டும் முயற்சியும் சமீபமாக நடக்கிறது. அது வெற்றி பெறும் என நம்புகிறேன்.     


 

 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.