Skip to main content

"நினைத்து நினைத்து பார்த்தால்" - ‘கேகே’ என்னும் காற்றில் கலந்த காதல் குரல்!

Published on 01/06/2022 | Edited on 03/06/2022

 

singer kk passed away

 

காதலின் குரலாக அறியப்பட்ட பிரபல பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடையை விட்டு வெளியேறினார். அங்கு இருந்து, தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது தீடீரென மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகுமாரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பாடகர் கேகே திரைத்துறையில் வருவதற்கு முன்பே கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு பாடியுள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற "ஸ்ட்ராபெரி கண்ணே..." என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கேகே முதல் பாடலே பலரின் கவனத்தை பெற்றார். முதல் பாடலிலே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கே  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடி அசத்தியுள்ளார். 

 

தமிழில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ( ரெட்), உயிரின் உயிரே (காக்க காக்க), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), வார்த்தை ஒன்னு (தாமிரபரணி), என் வெண்ணிலவே (ஆடுகளம்), நீயே நீயே நானே நீயே (எம். குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி) என 60-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் வெளியாகவுள்ள படத்தில் கூட கேகே ஒரு பாடல் பாடியுள்ளார். யுவனின் இசையில் இவரது குரலில் வெளியான ”நினைத்து நினைத்து பார்த்தேன்...” பாடல் 90 களில் காதலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காதல் தோல்வி அடைந்த காதலர்கள் மத்தியில் இந்த பாடல் அருமருந்தாய் இன்று வரை உள்ளது.  தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா ஹாரிஸ் ஜெயராஜ் என இரண்டு தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிய கலைஞன் தற்போது நம்மை விட்டு பிரிந்துள்ளது வருத்தமாகத்தான் இருக்கிறது. 

 

திரையுலகை தாண்டி பலதரப்பட்ட மக்களும் வருத்தத்தில் உள்ளனர். திரைத்துறையில் இவர் ஆற்றிய பணியை கௌரவிக்கும் வகையில், கொல்கத்தாவில் உயிரிழந்ததை அடுத்தும், அவரது உடலுக்கு விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

 

எது எப்படியோ கேகே பாடிய "நினைத்து நினைத்து பார்த்தால்..." பாடல்  திரும்ப திரும்ப அவரையே நினைவு கூறும், காதலின் குரல் தற்போது காற்றில் கலந்துள்ளது.