Skip to main content

எல்லைமீறிய ரவுடித்தனம்! காக்கிகளின் புதுப்புது டெக்னிக்!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

தமிழ்நாடு காவல்துறை, திருடர்கள் மற்றும் ரவுடிகளிடம் விசாரணை நடத்தும்போது,   புதுப்புது டெக்னிக்குகளைக் கையாள்கிறது. 

 

police vs rowdies


 

பொம்மைகள் ஆன திருடர்கள்!

கெட்டதைப் பார்க்காதே; பேசாதே; கேட்காதே! மூன்று குரங்கு பொம்மைகளைக் காண்பித்து, மகாத்மா கூறிய தத்துவம் நாம் அறிந்ததே!  இதே காந்தி ஸ்டைலுக்கு சென்னை காவல்துறையினர் மாறியிருக்கின்றனர். 
ஒரு வாரத்துக்கு முன், சென்னை மந்தைவெளியில் சீருடையில் இருந்த மணிமாறன் என்ற ஆயுதப்படை காவலரிடம் செல்போனை லபக்கிவிட்டான். இந்த விஷயம் லீக் ஆக,  ‘போலீஸ்கிட்டயே செல்போனை அடிச்சிட்டான்னா, அவன் பெரிய கில்லாடிதான்!’ என்று பரவலாகப் பேச ஆரம்பித்தார்கள். அதனால், இதை ஒரு கவுரவப் பிரச்சனையாக எடுத்துக்கொண்ட அபிராமபுரம் போலீசார், செல்போனை லபக்கிச் சென்றவனையும், அவனுடைய கூட்டாளிகள் இருவரையும் பிடித்து, மாவுக்கட்டு போடச் செய்தனர்.  அந்த நிலையிலும், அம்மூவரையும் காந்தி பொம்மைகள் ஆக்கி, சைகை காட்ட வைத்து, போட்டோ எடுத்தனர். எதற்காக இந்த நடவடிக்கையாம்? சிட்டிக்குள் அட்ராசிட்டி பண்ணும் ரவுடிகளுக்கும் வழிப்பறியில் ஈடுபடுபவர்களுக்கும் இது ஒரு பாடமாம்!


ரவுடிகளுக்கு ‘பட்டி பார்த்த’ காக்கிகள்!

2007 காலக்கட்டத்தில், திருச்சி மண்டலத்தில், ரவுடிகளின் ரவுசு எல்லை மீறிப்போனது. இன்றைய ஏடிஜிபி ஜாபர் சேட் அப்போது ஐ.ஜி.யாக இருந்தார். ரவுடிகளை ஒடுக்குவதற்கென்றே, ‘டெல்டா ஃபோர்ஸ்’ என்ற பெயரில் படை ஒன்றை வைத்திருந்தார். நள்ளிரவில் ரவுடிகளைக் குறிவைத்து அள்ளும் இந்தப் படையினர், பக்கத்து மாவட்டத்துக்கு தூக்கிச்சென்று துவைத்து எடுப்பார்கள். பிறகு, கை, கால்களில் மாவு கட்டுப் போட்டு, ஏதாவது ஒரு வழக்கு பதிவுசெய்து, சிறைக்கு அனுப்புவார்கள். ரவுடித்தனம் யார் செய்தாலும், அவனைப் பட்டி பார்த்து அனுப்பிவை என்பார் ஜாபர் சேட். மெக்கானிக் ஷெட்டுக்களில் வாகனத்துக்கு புதுப் பெயின்ட் அடித்துக் கொடுப்பதைத்தான் பட்டி பார்த்தல் எனச் சொல்வார்கள். ரவுடிகளுக்கும் இதே ட்ரீட்மென்ட் தான்!
 

அந்த நேரத்தில், ஜாபர் சேட் ஐ.ஜி.யாக இருந்தபோது, பிரேம் ஆனந்த் சின்கா எஸ்.பி.யாக இருந்தார். அவர்தான் இப்போது சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர். இவர் தலைமையில் இயங்கிய காக்கிகள்தான்,  ரவுடி தனசேகரனுக்கு ‘கைக்கட்டு’ போட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர். 


 

police vs rowdies


 

என்கவுன்டர் பின்னணியில் இன்ஸ்பெக்டர் – ரவுடி கூட்டணி! 

காவல்துறை அதிகாரிகள் சிலர் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இதே துறையில்,  ரவுடிகளோடு கூட்டணி அமைத்து, பாதகச் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளும் இல்லாமல் இல்லை.  கடந்த ஜூலை 2-ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் பிரபல ரவுடி ஆனந்தனும், அவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை சரமாரியாக வெட்டினர். இச்சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால், அடுத்த சில தினங்களிலேயே, கோட்டூர்புரம் ஏ.சி. சுதர்சன் தலைமையிலான போலீஸ் டீம், ரவுடி ஆனந்தனை என்கவுன்டர் செய்து பழி தீர்த்துக்கொண்டது. இந்த சம்பவத்தில், இப்போது புதிய தகவல் ஒன்று லீக் ஆகியிருக்கிறது. அதாவது, சம்பந்தப்பட்ட காவல் சரக இன்ஸ்பெக்டருக்கும் தாக்குதலுக்கு ஆளான காவலர் ராஜவேலுவுக்கும் ஆகவே ஆகாதாம்.  அதனால், அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற  நோக்கத்தில், ரவுடி ஆனந்தனிடம் அந்த இன்ஸ்பெக்டர் ‘அவனை (ராஜவேலு) ஊமக்குத்தா குத்திவிடுடா’ என்று கூறியதாகவும், அதன்பிறகே, தாக்குதல் நடந்ததாகவும், நிலைமை விபரீதமானதால், என்கவுன்டர் வரை சென்றுவிட்டதாகவும் காவல்துறை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. 
 

காவல்துறை அதிகாரிகள் ‘அப்படியும் இப்படியுமாக’ இருப்பதால், தமிழகத்தில் ரவுடிகளின் தலை நிமிர்ந்தே இருக்கிறது! ரவுடித்தனமும் ஒழிந்தபாடில்லை!