கேரளாவில் ஒரு ஆடியோ பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் இரு ஆண்கள் பேசிக்கொள்கின்றனர். கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகிய பெண் ஒருவரின் கணவர் ஒருவர், இன்னொருவரிடம் மொபைலில் பேசிக்கொள்கிறார். அதில் அவர், தன் மனைவி பாதிரியாளர்களால் பாலியல் தொல்லைகளும், வன்புணர்வும் செய்யப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் அவரது மனைவியின் மெயிலில் 5ஸ்டார் ஹோட்டலில் தங்கிய பில்களாக இருந்துள்ளது. அது என்ன என்று கணவர் கேட்டதற்கு அவரின் மனைவி மலங்கரா ஆர்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்த ஒரு பாதிரியார் தன்னை பிளாக்மெயில் செய்து பாலியல் வன்புணர்வு செய்தார் என்று கூறியதாக அதில் சொல்கிறார். மேலும் அதில், பல வருடங்களுக்கு முன்பு அதாவது அவர்கள் இருவருக்கும் திருமணமாவதற்கு முன்பே அவரது மனைவியை பாதிரியார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, தற்போதுவரை அதை காரணம்காட்டி பிளாக்மெயில் செய்துவருகிறார். அவர்கள் குழைந்தை ஞானஸ்தானத்தின்போது கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் அந்த சோகத்தை வேறொரு பாதிரியாரிடம் பகிர்ந்து பாவமன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அவரும் இதை கணவரிடம் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிளாக்மெயில் செய்துள்ளார். அப்போது அந்த பாதிரியார் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வேறொரு பாதிரியாருக்கு அனுப்ப, அவரும் இந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவுகள் என்று இதற்கு முன்னர் செய்தவர்கள் போன்றே செய்திருக்கிறார். அவர்கள் அந்த பெண்ணின் தகாத புகைப்படம், வீடியோ என்று எடுத்துக்கொண்டு அவரை பிளாக்மெயில் செய்துள்ளனர். அப்பெண்ணை 5 முதல் 8 பாதிரியார்கள் வரை சீண்டியிருக்கலாம் என்று அந்த ஆடியோவில் சொல்கிறார் அந்த கணவர்.
இதுத்தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அந்த சர்ச்சின் மேலிடத்தில் புகார் செய்துள்ளார். மேலும் அந்த சர்ச்சின் செய்தி தொடர்பாளர் பி.சி.எலியாஸ், “ஒரு பெண்ணின் கணவர் 5 பாதிரியார்கள் தனது மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தது உண்மைதான். அந்த 5 பாதிரியாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளும்வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். விசாரணையில் உறுதியான பின்புதான் அவர்கள் நல்லவர்களா, தீயவர்களா என்று சொல்ல முடியும். அவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது என்பதும் அப்போதுதான் முடிவு செய்ய முடியும். ஒரு வேளை விசாரணையின்போது அவர்கள் நல்லவர்கள் என்று முடிவு வந்தால் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இதே வேலைக்கு திரும்புவார்கள் என்று கூறியுள்ளார். அவர் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஐந்து பாதிரியார்கள் பற்றியும் தகவல்கள் தெரிவிக்கவில்லை.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பாதிரியாளர்களில் மூன்று பாதிரியார்கள் திருவல்லாவில் உள்ள நிராணம் டியோசீஸ், பண்டாலத்தில் உள்ள தும்பமொன் மற்றும் டெல்லியில் உள்ள டிவோசீஸை சேர்ந்த பாதிரியார்கள் என்று சொல்லப்படுகிறது. டிவோசீஸ் என்றால் கிறித்துவ மத குருவின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம். இந்த டிவோசீஸுக்கு கீழ் இந்தியா முழுவதும் 30 மாவட்டங்கள் உள்ளது. இந்த பிளாக்மெயில் விஷயத்தில் பல பாதிரியாளர்கள் இருப்பதாகவும், அவரது மனைவி அவர்களை பற்றி வெளியே சொல்வதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்ச்சின் நிர்வாக குழு செயலாளர் பாதிரியார் மேத்திவ்," இது முற்றிலும் நம்பத்தகுந்ததில்லை. பாதிரியார் யாராவது 5ஸ்டார் ஹோட்டலிற்கு பாலியல் வன்புணர்விற்காக அழைத்து செல்வார்களா. அங்கிருக்கும் சிசிடிவியை பார்த்தாலே தெரிந்துவிடும். இவர் ஏற்கனவே கம்யூனிட்டியை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர். ஆகையால் அதற்கு பழிவாங்கும் நோக்கில்கூட இவ்வாறு தவறாக சித்தரித்து சொல்லலாம்", என்கிறார்.
ஒரு சிலர், சர்ச் பாதிரியாளர்களின்மீது இவ்வாறு பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கான விசாரணை கிறிஸ்துவ மத குருமார்கள் சரியாக நடத்துவதில்லை. பாதிரியார்கள் இப்படி தவறு செய்தியிருக்கிறார்கள் என்று வெளியே தெரியவந்தால், அது அந்த மதத்திற்கே பெரிய விளைவை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இது போன்ற விசாரணைகளை தட்டிக்கழித்தும், பாதிரியாளர்களை காப்பாற்றியும் வருவதாக தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்றுவரை காவலர்களிடம் வழக்கு தொடரவில்லை, சர்ச் நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு அந்த பாதிரியார்களின் பதவி பறிக்கப்பட்டாலே போதும் என்று அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் நேஷனல் விமன் கமிஷன் என்று சொல்லப்படும் பெண்கள் நலக்குழு இதைப்பற்றி கேரள கோட்டயம் காவல்துறையின் குற்றவியல்துறை இயக்கி வரும் டிஜிபி லோக்நாத் பெஹ்ராவிடம் கோரிக்கை வைத்தனர். இதேபோன்று முன்னாள் முதல்வர் அச்சுனானந்தனும் கோரிக்கை வைத்துள்ளார். அப்படி இருந்தால்தான் நல்ல நேர்மையான விசாரணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.