1999ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தின் ஒருநாள் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இருவர்கள் மிகவும் பதட்டத்துடன் காவல்துறை தகவல் அலுவலகத்திற்கு ஓடி வருகிரார்கள். பதட்டத்தோடு இருந்த அவர்களை பார்த்த காவல்துறை அதிகாரிகள், அவர்களிடம் ஏதேனும் பொருட்களை தொலைத்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளனர். இல்லை என்று தலையாட்டிய அவர்களை, காவல்துறை அதிகாரிகள் சிரிப்போடு கடந்து சென்றார்கள். பின்னர் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள் என்று ஒரு பெண் காவல்துறை அதிகாரி அவர்களிடம் கேட்டபோது தான், அதுவரை எதுவும் பேச முடியாமல் விக்கித்து நின்ற அவர்கள் வாய்திறந்து அந்த "உண்மை"யை கூறினார்கள். "நாங்கள் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் சில நபர்கள் பெரிய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். எங்களை பார்த்த அவர்கள், திடீர் என்று துரத்த ஆரம்பித்தார்கள். நாங்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவந்து விட்டோம்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்த சிறுவர்கள் கூறிய இடம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதி. ஆம், அவர்கள் கூறிய அந்த ஒன்றை வார்த்தையே கார்கில் போருக்கு காரணமானது.
மற்ற இந்திய மாநிலங்களை விட காஷ்மீர் மாநிலத்துக்கு பல்வேறு சி்றப்புக்கள் உண்டு. காஷ்மீர் மாநிலத்துக்கு என்று தனிகொடி உண்டு. மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் 6 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க இயலாது என பல்வேறு சிறப்பு அதிகாரங்களை காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியலமைப்பின் 370 பிரிவு வழங்கியுள்ளது. பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் 5வது பெரிய மாநிலமாக காஷ்மீர் இருகிறது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளோடு தனது எல்லைகளை அந்த மாநிலம் பகிந்துகொண்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கார்கிலும் ஒன்று. கார்கில் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
இது ஸ்ரீநகரில் இருந்து 210 கி.மீ துாரத்தில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழாக இறங்கிவிடும். எனவே, இங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் இந்திய, பாக்., ராணுவ வீரர்கள் இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் செப். 15 முதல் ஏப். 15 வரை கார்கில் மலைச் சிகரங்களில் இருந்து வெளியேறி விடுவார்கள். ஏப்ரல் மாதத்தின் மத்திய பகுதியில் இருந்து அவர்கள் மீண்டும் தங்களின் வழக்கமான பாதுகாப்பு பணிகளை அங்கு தொடர்வார்கள். இந்நிலையில் தான் கார்கில் மாவட்டதித்ல உள்ள ஒருபகுதியில் மர்ம நபர்கள் சிலர் புகுந்திருப்பதை சிறுவர்கள் வாயிலாக இந்திய ராணுவத்தினர் அறிந்துகொள்கிறார்கள். அந்த குறிப்பிட்ட இடத்திற்கு ராணுவ வீரர்கள் செல்ல முயன்ற போது பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டுப்பிடித்தனர். 'ஆப்ரேஷன் பாதர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திட்டமிடப்பட்ட அத்துமீறல் இது என்பதை இந்திய ராணுவத்தினர் கண்டுப்பிடித்தனர்.
பாகிஸ்தான் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னர் பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவை நாடியது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கிற்கு கடும் கண்டம் தெரிவித்ததால், வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்க உடன்பட்டது. 1999ம் ஆண்டு ஜூலை 26ல் இந்தியா, கார்கில் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றி இந்திய கொடியை பறக்க விட்டது. அந்த வெற்றிக்கு பிறகு பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், " உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட வெற்றிபெற முடியாத அவர்கள், எந்த நம்பிக்கையில் இந்தியாவுடன் போரிட வந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருகிறது" என்று கூறி தன்னுடைய வார்த்தை ஜாலத்தால், பாகிஸ்தானை பந்தாடினார் வாஜ்பாய். இதை வாஜ்பாய் குறிப்பிடுவதற்கும் காரணமும் இருக்கிறது. கார்கில் போருக்கு சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி பெற்ற சம்பவத்தை தான் வாஜ்பாய் தனக்கே உரிய பாணியில் கூறினார்.