Skip to main content

“ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் இல்லை...” - திமுக மதிவாணன் தாக்கு

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

DMK spokesperson Mathivanan talk about bjp and narendra modi

 

நாம் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் மதிவாணனை சந்தித்து பேசினோம். அந்த சந்திப்பில் நம்முடன் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதன் சிறு பகுதியை மட்டும் இங்கு தொகுத்துள்ளோம்....

 

“கலைஞரும், ஜெயலலிதாவும் இருக்கும்வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறவில்லை. ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் எதிர்த்த மத்திய அரசின் மசோதாக்களுக்கு ஓபிஎஸ் கையெழுத்திட்டார். மோடியின் பாதத்தைத் தொட்டு வணங்கி நீட்டை அப்போது அவர்கள் ஆதரித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த வரலாறும் தெரியாது. சட்டசபையில் மோடியைக் கண்டித்து ஒரு தீர்மானம் கூட எடப்பாடியால் போட முடியவில்லை. ஆளுநரை எதிர்த்து அதிமுகவால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. 

 

நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பிறகும், தான் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன் என ஆளுநர் பேசுகிறார். நீட் தேர்வினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இவர்கள் தான் காரணம். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றச் சொல்லி பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு கொடுப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. சாலை போடுவதில் பாஜக செய்துள்ள ஊழல் தற்போது வெளிவந்துள்ளது. எந்த வளர்ச்சியையும் மக்களுக்கு பாஜக வழங்கவில்லை. 

 

ஆனால் திமுக தன்னுடைய இரண்டரை வருட ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. எங்களுடைய சாதனைப் பட்டியலை எங்களால் சொல்ல முடியும். பாஜகவால் அது முடியுமா? கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு பலமுறை சென்ற மோடியால் மணிப்பூர் செல்ல முடியவில்லை. மணிப்பூரில் இருக்கும் மக்கள் நம்முடைய மக்கள் இல்லையா? உச்சநீதிமன்றம் தலையிடும் வரை இவர்கள் மணிப்பூர் விஷயம் குறித்துப் பேசவே இல்லை. பிரச்சனையின் வீரியத்துக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக ஆளுநர் இருக்கிறார். அது சம்பந்தமான கோப்புகளின் மீது கையெழுத்துப் போடாமல் இருக்கிறார். இதற்கு பயந்து தான் பாஜகவுக்கு அதிமுக அடிமையாக இருக்கிறது. திமுக ஊழல் செய்கிறது என்று சொல்லும் எதிர்க்கட்சியினர் அதற்கான எந்த ஆதாரத்தையும் கொடுப்பதில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. 2019 ஆம் ஆண்டு நீட்டுக்கு கையெழுத்து போட்டார்கள் என்று எடப்பாடி பேசுகிறார். அப்போது மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் இவருடைய ஆட்சி தான் நடந்துகொண்டிருந்தது. கொஞ்சமாவது யோசித்துப் பேச வேண்டாமா? டிடிவி தினகரன் எல்லாம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். எங்களை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை. சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்து சிறை சென்றவர் அவர். அவருடைய சித்தி ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்