Skip to main content

''சென்னை சலோ!'' - தமிழக போர்க் குரல்! 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

tttt

 

தலைநகர் டில்லியில் மத்திய அரசின் பாராமுகத்துக்கு நடுவிலும் 35-வது நாளாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 29-ஆம் தேதி மாலை 'வேளாண் சட்டங்கள் ரத்து', 'மின்சார திருத்தச் சட்டம் 2020 -ரத்து' என்ற கோரிக்கைகளுடன் தஞ்சை திலகர் திடலில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்திருந்தது.  

 

தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் அணியணியாக திரண்டுவரத் தொடங்கினர். தமிழக காவல்துறையோ அவர்களைக் கைது செய்வதில் மும்முரமானது. காவல்துறையின் கெடுபிடியை அறிந்த விவசாயிகள், கல்யாண நிகழ்ச்சிகளுக்குப் போவதுபோல திலகர் திடல் வந்துசேர்ந்தனர். கைது செய்யப்படும் விவசாயிகளைத் தங்கவைக்க தஞ்சையில் மட்டும் 15 திருமண மண்டபங்களை முன்பதிவு செய்து வைத்திருந்தனர். பேரணிக்கு அனுமதி வழங்காததால், பொதுக்கூட்டம் மட்டும் நடத்தப்பட்டது. திலகர் திடல் நிரம்பி வெளியேயும் விவசாயிகள் திரண்டு நின்றனர்.

 

வரவேற்புரை நிகழ்த்திய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், "எமர்ஜென்சி காலத்தில்கூட இதுபோன்ற அடக்குமுறை நடந்ததில்லை. அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து, எடப்பாடி முகத்தில் அடிக்கும் விதமாக விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். அனைவரையும் வரவேற்கிறேன்'' என்றார்.

 

மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி, தான் ஒரு விவசாயி என்கிறார். இந்தச் சட்டத்தை ஆதரிப்பதிலிருந்தே அவர் ஒரு கார்ப்பரேட் விவசாயி என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம், "இன்று தமிழக அரசின் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு தடைகளைத் தகர்த்து மாநில அளவிலான விவசாயிகளின் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் கடுங்குளிரில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக் கிறார்கள். தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சிபோல போராட்டத்திற்கு வருவோர்களின் வாகனங்கள் செல்லவிடாமல் மிரட்டுவது, வாகன உரிமையாளர்களை மிரட்டுவது, கரோனாவைக் காரணம் காட்டி விவசாயிகளை மிரட்டி கைதுசெய்வது போன்றவை இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டத்தைக் கூட்டினார். அங்கே கரோனா பரவாதா? விவசாயிகள் போராடினால் மட்டும் தான் கரோனா பரவுமா? 

 

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி? விவசாயிகளுக்கு ஒரு நீதியா? அந்தச் சட்டங்களை ஆதரிக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றால் அதை எதிர்க்க எங்களுக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறது இந்திய அரசியல் சாசனம். நாற்பது உயிர்களைப் பறிகொடுத்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மோடி கண்டுகொள்ளவில்லை.. இந்தச் சட்டம் வந்தால் விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்படும். இந்தச் சட்டத்தால் 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் ரத்துசெய்யப்படும். இந்தப் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றால், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும்'' எனப் பேசினார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம், "இதேபோல பத்து மடங்கு கூட்டத்தைக் கூட்டுவோம். அ.தி.மு.க. - பா.ஜ.க.வில் உள்ள சிறுகுறு விவசாயிகள் தங்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்தச் சட்டத்தால் பாதிப்புகள் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். வேளாண்மைக்கு எதிரான அரசுகளைத் தூக்கி எறிய வேண்டும்'' என்றார்.

 

cnc

 

"இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்து மத்திய-மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளன. மத்திய அரசுப் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை என்றால், டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக 'சென்னை சலோ' என்ற பெயரில் சென்னையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தத் தயாராவோம்' என்று தீர்மானம் வாசித்தனர்.

 

டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட போராட்டக் காரர்களை 'தரகர்கள்' என்ற முதல்வர் எடப்பாடி, அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில், தஞ்சைத் திடல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை என்ன பெயரில் அழைப்பாரோ!