Skip to main content

எப்படி இருக்கிறது அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் - விமர்சனம் 

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

Anya's Tutorial

 

லாக் டவுன் சமயத்தில் வீட்டுக்குள்ளேயே வைத்து காம்பேக்ட் ஆக ஒரு படத்தை எடுத்து கொடுக்க பல்வேறு இயக்குநர்கள் முயற்சித்து அதில் சிலர் வெற்றி கண்டுள்ளனர். அதில் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது இதே பாணியில் உருவாகி ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ள அன்யாஸ் டுடோரியல் வெப்சீரிஸ் வரவேற்பைப் பெற்றதா? இல்லையா?

 

சிறுவயதிலேயே தந்தையை இழந்த அக்கா தங்கையான ரெஜினா கஸன்ட்ரா, நிவேதா ஆகியோர் தங்கள் தாயுடன் தனிமையில் வசிக்கின்றனர். வீட்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக நிவேதிதா கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக ஒரு வீடு எடுத்து தங்குகிறார். அந்த நேரம் கரோனா லாக்டவுன் என்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கிடையே நிவேதிதா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அழகுக்கலை குறிப்புகளை தினமும் வீடியோவாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் அவர் லைவில் இருக்கும் நேரத்தில் அவர் இருக்கும் அறையில் ஒரு பேய் நடமாட்டம் தெரிகிறது.

இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து பயந்து விடுகின்றனர். நிவேதிதாவின் அக்காவான ரெஜினா கெஸன்ட்ராவும் அந்த வீடியோவை பார்க்கிறார். இருவருக்குள்ளும் வீடியோ காலில் முட்டல் மோதல் ஏற்படுகிறது. அதேசமயம் இந்த ஒரு வீடியோவால் நிவேதிதா வைரல் ஆகிறார். இதையடுத்து அமானுஷ்யம் நிறைந்த அந்த வீட்டில் இருக்கும் நிவேதிதாவின் நிலை என்னவானது? உண்மையில் அந்த வீட்டில் இருப்பது பேய் தானா? ரெஜினா நிவேதிதா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதே இந்த தொடரின் மீதிக்கதை.

 

இந்த தொடர் ஆரம்பித்து முதல் இரண்டு மூன்று எபிசோடுகள் மிகவும் மெதுவாக நகர்ந்து பார்ப்பவர்களை சோதித்து விடுகிறது. எந்த ஒரு இடத்திலும் திருப்பமும் தெளிவு இல்லாமல் மிகவும் ஃப்ளாட்டாக செல்லும் கதை நாலாவது எபிசோடுக்கு பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்து போகப்போக சுவாரஸ்யம் அதிகரித்து ஒரு கிரிப்பிங்கான ஹாரர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது. கரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே வைத்து ஒரு காம்பேக்ட் ஆன படத்தை கொடுக்க முயற்சி செய்த ஏஆர் முருகதாஸின் உதவியாளரும், இப்படத்தின் இயக்குநருமான பல்லவி கங்கி ரெட்டி அதை இன்னும் கூட சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கலாம்.

மூன்று எபிசோடுகளை தாண்டி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை கொடுத்த இயக்குனர் முதல் மூன்று எபிசோடுகளில் அதைக் கொடுக்க தவறி உள்ளார். மூன்று எபிசோடுகளை கடந்த பின்னரே இந்த தொடர் விறுவிறுப்பாக செல்லும் பட்சத்தில் அந்த மூன்று எபிசோடுகளை கடப்பது என்பதுதான் இத்தொடரின் மிக பெரிய டாஸ்காக அமைந்துள்ளது. மற்றபடி கதையோ கதாபாத்திரமும் திரைக்கதையோ எந்த இடத்திலும் டைவர்ட் ஆகாமல் நேர்த்தியாக சென்று ஒரு நிறைவான ஹாரர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துள்ளது.

 

படத்தில் சொல்லிக்கொள்ளும்படி அதிக கேரக்டர்கள் இல்லை. படம் ரெஜினா மற்றும் நிவேதிதா சுற்றி மட்டுமே நகர்கிறது. இதனால் படம் முழுவதும் இவர்கள் இருவருமே ஆக்கிரமித்துள்ளனர். ரெஜினா கெஸன்ட்ரா வார்த்தைக்கு வார்த்தை சென்சார் கட் செய்யும் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி நடித்துள்ளார். இவருக்கும் நிவேதிதாவுக்குமான அக்கா தங்கை கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. என்னதான் இவர்கள் இருவரும் வீடியோ காலிலேயே பேசிக் கொண்டாலும் காட்சிகளில் சுவாரஸ்யம் குறையாத படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். தங்கையாக நடித்திருக்கும் நிவேதிதாவும் வார்த்தைக்கு வார்த்தை சென்சார் கட் செய்யும் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி நடித்துள்ளார். இவருக்கும் பேய்க்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி காட்சிகளுக்கு திகில் கூட்டியுள்ளது. மற்றபடி சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த அக்கா தங்கை, நிவேதிதாவின் ஆண் நண்பர், பேயைக் கண்டு அலறும் சிறுவன், அவனுடைய தோழி மற்றும் இன்னும் சிலர் அளவான நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி சென்றுள்ளனர். 

 

என்னதான் படம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் படம் பிடித்து இருந்தாலும் அதை திறம்பட கையாண்டு சிறப்பான ஆங்கில்கள் மூலம் காட்சிகளை உலகத்தரம் வாய்ந்ததாக அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் கே சக்கரவர்த்தி. இவரது ஒளி அமைப்பும், நேர்த்தியான படப்பிடிப்பும் காட்சிகளுக்குள் திகில் கூட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் அரோல் கரோலி பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. திகில் ஏற்படுத்தும் காட்சிகளில் சிறப்பான சப்தங்கள் மூலம் பார்ப்பவர்களை பயமுறுத்தி உள்ளார்.

 

ஒரு நிறைவான திகில் தொடரை கொடுத்த இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி முதல் மூன்று எபிசோடுகளில் கவனமாக இருந்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருந்தால் இந்த தொடர் இன்னமும் கூட நன்றாக பேசப்பட்டிருக்கும்.

 

அன்யாஸ் டுடோரியல் - திகில் ஓகே! வேகம் குறைவு!

 

 

சார்ந்த செய்திகள்