Skip to main content

"தேவரின் தேசிய சிந்தனைகளை பாடமாக கற்றுத்தர வேண்டும்" - வைரமுத்து விருப்பம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

vairamuthu about muthuramalinga thevar

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா இன்று (30.10.2023) கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேவர் திருமகன் என்பது ஒரு இனப்பெயர் அல்ல. தேசத்தின் அடையாளங்களில் ஒன்று. அருள்கூர்ந்து தமிழ் சமூகம் தேவர் பெருமகனை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்து விட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது என் குரல் அல்ல. தேவர் பெருமகன் சொன்ன சொல். 

 

தேவர் திருமகன் சொன்னார், எனது ஆறு மாதத்தில் தாயை இழந்தேன்; எனக்குப் பாலூட்டியவர் ஒரு முஸ்லிம் தாய், கல்வி கொடுத்தோர் கிறித்துவப் பாதிரிமார்கள் என் பெற்றோர் இந்துக்கள், இதில் எங்கே இருக்கிறது சாதி? என கேட்டார். அவரை சாதி என்ற வட்டத்தை விட்டுவிட்டு தேசியம் என்ற பெரும் சிந்தனைக்குள் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சொன்னார், 2 லட்சம் ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றேன். இதில் என் சமுதாய ஓட்டுகள் வெறும் 18 ஆயிரம் தான். மீதமுள்ள ஓட்டுகள் எல்லாம் அத்தனை சமூகவத்தரும் இட்டு வெற்றிபெற செய்தார்கள் என்றார். அந்த வட்டத்தை விட்டு அவரை வெளியே கொண்டு வந்து அவரது தேசிய சிந்தனைகளை, சமூக சிந்தனைகளை, அவரது தியாகத்தை, ஒரு பெரிய பாடமாக இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

 

இன்னொன்று, தேவர் என்று சொன்னால், அது சாதிய அடையாளம் என்று ஒரு குறிப்பிட்ட வட்டம் என்பது இல்லை. உ.வே சாமிநாத ஐயர் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, வ.உ சிதம்பரம் பிள்ளை என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, லட்சுமண சாமி முதலியார் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, இவையெல்லாம் அவர்களின் குடி அடையாளம். என் தந்தை வரைக்கும் தேவர் என்ற பட்டத்தை வைத்து கொண்டது அவர்களின் அடையாளம். நான் வைத்துக்கொள்ள போவதில்லை என்பது எனது சமூகசீர்திருத்தம், எனது உள்ளம். எனவே பழைய பெயர்களை அழித்து விட வேண்டாம். புதிதாக யாரும் சாதி பெயர்களை வைத்து கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோளாக இருக்கிறது. அம்பேத்கரை எல்லா சமூகமும் கொண்டாட வேண்டும் என்பதை போல தேவரையும் அனைத்து சமூகமும் கொண்டாட வேண்டும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்