Skip to main content

“சட்டத்திற்குப் புறம்பான செயல்” - சிக்கலில் விக்னேஷ் சிவன்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
trouble in vignesh shivan regards lic movie title issue

இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். கதாநாயாகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் அறிவிப்பு நேற்று பூஜையுடன் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டு வெளியானது. படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பூஜை நிகழ்ச்சி புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் படக்குழு அது பற்றி குறிப்பிடவில்லை.   

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், எல்.ஐ.சி தலைப்பு என்னுடையது என்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் எல்.ஐ.சி என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸின் வாயிலாகப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் எல்.ஐ.சி என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச் சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். 

அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரத்தன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். எல்.ஐ.சி என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது  என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு குறித்து உலா வந்த தகவலுக்கு முற்றுப்புளி வைத்த பிரபலம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
ashwath marimuthu clarifies to simbu fans

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாக கடந்த 11ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அந்த வீடியோவில், பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்திருந்தனர். 

ashwath marimuthu clarifies to simbu fans

இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு முதலில் நடிக்கவிருந்து பின்பு பிரதீப் ரங்கநாதனுக்கு வந்துள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இத்தகவலை தற்போது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார். “எல்லா சிம்பு ரசிகர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். சிம்பு சார் என்னை அழைத்து படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது ஸ்டைலில் பாராட்டினார். ஓ மை கடவுளே படத்தின் போதும் முதல் ஆளாக அழைத்து ஒன்றரை மணி நேரம் பாராட்டினார். ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். அவருக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் வேறு. அவர் ரெடியாக இருக்கும் போது அப்படம் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

அஷ்வத் மாரிமுத்து அவரது முதல் படமான ஓ மை கடவுளே படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அஷோக் செல்வன், ரிதிகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து தெலுங்கில் ஓ மை கடவுளே படத்தை ரீமேக் செய்தார். இதையடுத்து ப்ரதீப் ரங்கநாதன் படத்தை இயக்குகிறார். 

Next Story

10 வருடம் கழித்து நடக்கும் பிரதீப் ரங்கநாதனின் ஆசை

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
pradeep ranganathan next with ashwanth marimuthu

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தை 'ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்' தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2022ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. 

இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவகியது. அந்த சூழலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லலித் தயாரிக்க கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

pradeep ranganathan next with ashwanth marimuthu

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஓ மை கடவுளே பட இயக்குநர் அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மே முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் ரங்கநாதனும் அஷ்வத் மாரிமுத்துவும் நண்பர்கள் எனவும் இரண்டு பேரும் 10 வருடங்களுக்கு முன்பே இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டதாகவும் அந்த நினைவுகளைப் பகிரும் வகையில் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். மேலும் 10 வருடத்திற்கு முன்னால் எடுத்த ஃபோட்டோவை ரீ கிரியேட் செய்து அதே இடத்தில் தற்போது ஃபோட்டோ எடுத்து பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.