Skip to main content

இரு ஆண்களுடன் ஒரே மேடையில் திருமணம், ஒரு பெண்ணுடன் தீரா பகை... - அமெரிக்காவின் டைகர் கிங்! 

Published on 01/05/2020 | Edited on 19/05/2020
tiger king joe exotic




அமெரிக்கா, கரோனாவால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது. மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். லாக்டவுனில் அமெரிக்க மக்களுக்குப்  பெருந்துணையாக இருந்தது, இருப்பது நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட OTT தளங்கள்தான். அதிலும் நெட்ஃப்ளிக்ஸ், அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் தளமாக இருக்கிறது. அதில் கடந்த மார்ச் மாதம் வெளியான 'டைகர் கிங் - மர்டர், மேஹெம் அண்ட் மேட்னஸ்' என்ற ஆவணத் தொடர் (docuseries), அமெரிக்கர்களின் பெரும் வரவேற்பை பெற்று பேசுபொருளாகி இருக்கிறது. 'டைகர் கிங்' என்று அழைக்கப்படும் (தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பெயர்) ஜோ எக்ஸாடிக் (எ) ஜோசப் ஆலன் மால்டொனாடோ பாசெஜ்  பற்றிய ஆவணத் தொடர்தான் அது.


டைகர் கிங், ஒரு வித்தியாசமான விபரீதமான பாத்திரமாக இருக்கிறார். அதுவும் இந்திய பார்வையில் அவர் முற்றிலும் விபரீதமான மனிதர்தான். சட்டையிலும் ஜாக்கெட்டிலும் ஆங்காங்கே கயிறு தொங்க, கிழிந்த ஜீன்கள், 'ஜிகு ஜிகு'வென மின்னும் வண்ண உடைகள் என ரணகளமான உடைகளில்தான் வளம் வருகிறார் இந்த டைகர் கிங். 1963ஆம் ஆண்டில் பிறந்த இவர் ஆரம்பத்தில் சில காலம் போலீசில் பணியாற்றினார். பின்னர் தனது பெற்றோர் உதவியுடன் ஓக்லஹாமா மாகாணத்தில் வின்வுட் என்ற பகுதியில் G.W.Zoo (Greater Wynnewood Exotic Animal Park) என்றழைக்கப்டும் தனது மிருகக்காட்சி சாலையை  நிறுவினார். உலகம் முழுவதும் காடுகளில் வாழும் மொத்த புலிகளின் எண்ணிக்கையை விட அமெரிக்காவில் தனியார்கள் வைத்திருக்கும் புலிகளின் எண்ணிக்கை அதிகமென்கிறார்கள். டைகர் கிங்கும் நூற்றுக்கணக்கான புலிகளை வளர்த்து, இனப்பெருக்கம் செய்ய வைத்து விற்பனையும் செய்து வந்திருக்கிறார். மேலும், புலிகளை ட்ரக்குகளில் ஏற்றி ஷாப்பிங் மால்கள், பொது இடங்களில் காட்சிப்படுத்தி சம்பாதித்திருக்கிறார். தனது மிருகக்காட்சி சாலைக்கு வரும் மக்கள், புலிக்குட்டிகளுடன் நெருங்கிப் பழக, கொஞ்சி விளையாட, புகைப்படம் எடுத்துக்கொள்ள என ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலித்து வந்திருக்கிறார்.

 

 

jo exotic



இவற்றையெல்லாம் செய்து வந்தபோது டைகர் கிங்குக்கு பிரச்னைகள் வரவில்லை. அமெரிக்காவில் இவரைப் போல பலரும் காட்டு விலங்குகளை வளர்த்து அவற்றின் மூலம் சம்பாரித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே தாங்கள் விலங்குகளை பாதுகாப்பதாகத்தான் சொல்லி வருகின்றனர். ஆனால் டைகர் கிங், ஒரு விளம்பர பிரியர், இசை ஆர்வலர். தினமும் தனது ஜூவில் இருந்தே வீடியோக்களை வெளியிட்டார், ரியாலிட்டி ஷோ நடத்தினார். அதனால் மக்கள் பார்வையில் அதிகம் பட்டார். படக்கூடாதவர்களின் பார்வையிலும் பட்டார். டைகர் கிங்குக்குப் பிரச்னை தொடங்கியது கெரொல் பாஸ்கின் என்ற பெண்ணின் மூலம்தான். கெரொல் பாஸ்கினும் விலங்குகள் நல ஆர்வலர் என்ற பெயரில் செயல்படுபவர்தான். 'பிக் கேட் ரெஸ்க்யூ' (Big Cat Rescue) என்ற பெயரில் அவரும் பல விலங்குகளை வளர்த்து வருகிறார். அவர், டைகர் கிங் போன்ற பிறர் புலிகளை சரியான முறையில் வளர்ப்பதில்லை எனவும் புலிகளை வைத்து பணம் சம்பாதிப்பதாகவும் புலிகளை துன்புறுத்துவதாகவும் தொடர்ந்து புகார் கூறி வந்தார். அரசு அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்துள்ளார். முக்கியமாக டைகர் கிங் குறித்து, தனது சமூக வலைதள கணக்குகளில் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

 

carole baskin

கெரொல்



நாம் தொடக்கத்தில் சொன்னது போல டைகர் கிங் வித்தியாசமானவர், விபரீதமானவர். புகழை விரும்புபவர். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் (ட்ரம்ப் ஜெயிச்சாரே அதுலதான்) சுயேட்சையாக போட்டியிடும் முயற்சிகளில் இறங்கியவர். பிறகு தனது ஓக்லஹாமா மாகாணத்தின் கவர்னர் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். டைகர் கிங், நிலையான மனதை கொண்டவரில்லை. திடீரென கோபப்படுவார், தனது ஊழியர்களிடம் கடுமையாக நடந்துகொள்வார். அவர், தன்னை வெளிப்படையாக ஓரின சேர்க்கையாளராக அறிவித்துக் கொண்டவர். பல ஆண்களுடன் உறவில் இருந்தாலும், தனது ஜூவில்  பணிபுரிய வந்த, தன்னை விட பல வருடங்கள் இளையவர்களான ஜான் ஃபின்லே, டிராவிஸ் ஆகிய இருவரையும் ஒரே நிகழ்வில், ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்டார். டிராவிஸ் தன்னை தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மறைந்துவிட, ஜான் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட, தில்லோன் என்பவருடன் வாழ்ந்தார் டைகர் கிங். கெரொல் தன் மேல் வைத்த புகார்களுக்கு மிக அதிரடியாக பதில் கொடுத்துவந்தார். தனது வீடியோக்களில் மிக வெளிப்படையாக கெரோலுக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்தார். கெரொல் போன்ற பொம்மையை வைத்து அதை துப்பாக்கியால் சுட்டார். கெரொல் நடத்தி வந்த நிறுவனத்தின் லோகோ போன்றே தானும் உருவாக்கி பயன்படுத்தினார். கெரொல், தனது முன்னாள் கணவர் டான் லெவிஸை கொன்று புலிகளுக்கு உண்ண கொடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார். (கெரோலின் கதை ஒரு தனி புதிர் கதை). இவையெல்லாம் கெரோலுக்கு சாதகமாக அமைய டைகர் கிங் மேல் வழக்குகள் தொடரப்பட்டன.


பொருளாதார ரீதியாக பலவீனமான அவர், ஒரு கட்டத்தில் கெரோலை கொல்ல ஒருவரை ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 2018 செப்டம்பரில் கைது செய்யப்பட்ட அவர் மீது, கெரோலை கொல்ல ஆள் ஏற்பாடு செய்தது, புலிகளை கொன்றது, துன்புறுத்தியது என பல வழக்குகள் தொடரப்பட்டு 2019இல் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அவரது ஊழியர்கள் சிலரும் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். இப்போது டைகர் கிங் சிறையில் இருக்கிறார். அவரது வயதை கருத்தில் கொண்டால் அவர் காலம் முழுவதும் சிறையில்தான் இருக்க நேரிடும்.
 

 

tiger king wedding

திருமணம்



அவர் சிறைக்குச் சென்ற பின் வெளிவந்துள்ள 'டைகர் கிங்' ஆவணப்படம் அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு வித அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது தண்டனையை குறைக்க வேண்டுமென பலர் கோரிக்கை வைக்கிறார்களாம். இந்த ஆவணப்படம் அவரை அப்பாவியாக சித்தரித்திருப்பதாகவும் அது மிகவும் தவறு எனவும் அவருக்கு தண்டனை அளித்த நீதிபதிகளில் ஒருவர் கண்டித்துள்ளார். கெரொல் உள்ளிட்ட பலரும் டைகர் கிங்குக்கு எதிராகப் பேசி வருகின்றனர். சமூக ஊடகங்களில் கெரொல் ஆதரவாளர்களும் டைகர் கிங் ஆதரவாளர்களும் போட்டி போடுகின்றனர். ஆவணப் படத்தில் இடம்பெற்ற டைகர் கிங்கின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் தாங்கள் அடைந்திருக்கும் புகழ் குறித்து மகிழ்கின்றனர்.

இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கும் எண்ணத்தில் சில முன்னணி நிறுவனங்கள் இருக்கின்றனவாம். தான் புகழ் பெற வேண்டும் என்று மிகவும் விரும்பி பல செயல்களை செய்த டைகர் கிங், இப்போது அடைந்திருக்கும் இந்தப் புகழை அனுபவிக்கும் நிலையில் இல்லை.  


                      

சார்ந்த செய்திகள்

Next Story

பொங்கல் பண்டிகை; ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
New update of 'Vidamuyarchi' movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘படாஸ் மா...’ - விஜய்யின் லியோ ஓடிடி அப்டேட்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

vijay leo ott update

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. 

 

முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் 7 நாட்களில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு அறிவித்தது. இந்த வெற்றியை பிரம்மாண்டமாக படக்குழு கொண்டாடியது. இதையடுத்து ‘நா ரெடி...’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிலும், 28 ஆம் தேதி உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.