Skip to main content

‘இந்த தலைமுறையினருக்கு இளையராஜாவால் இசை அமைக்க முடியாதா?..’- வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், இயக்குனர் கௌதமன், பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

thirumavalavan

 

 

இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய தொல்.திருமாவளவன், “தற்போதெல்லாம் பிறக்கும் குழந்தைகள் கையில் மொபைல் போனை பிடித்துக்கொண்டே பிறக்கின்றன. உலகம் அவர்களின் உள்ளங்கைகளுக்கு வந்துவிட்டன. அவர்களை எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஐம்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சிந்திக்க முடியாது. அவர்கள் எதிர்பார்ப்பது தெரியும் புரியும் ஆனால் அவர்களுடன் இணங்கி செயல்பட முடியாது. இது ஒரு உளவியல் சிக்கல், இதுதான் தலைமுறை இடைவெளி என்பது. 

அரசியலில் தலைவர்கள் தோற்றுப்போவார்கள், திரையுலகில் இயக்குனர்கள் தோற்றுப்போவார்கள் அல்லது நடிகர்கள், நடிகைகள் தோற்றுப்போவார்கள். இசைஞானி இளையராஜாவை உலகமே ஒரு 25 ஆண்டுகள் கொண்டாடியது. திடீரென ஏ.ஆர். ரஹ்மான் வந்தார் உலகம் அவரை தூக்கிக்கொண்டது. இளையராஜா எங்கோ இருக்கிறார். இளையராஜாவுக்கு இந்த தலைமுறையினருக்கு ஏற்றார்போல இசை அமைக்க முடியாதா? அது அவருக்கு தெரியாதா? என்ற கேள்விகளெல்லாம் நமக்கு எழும். ஆனால், அதற்கு விடை சொல்ல முடியாது. 

ஐம்பது அல்லது அறுபது வயது மூத்தவர்களை கூப்பிட்டு எஸ்.பி. முத்துராமன் குறித்து கேட்டால், ‘அடேங்கப்பா... அவர் எவ்வளவு பெரிய இயக்குனர். அவருடைய படங்கள் அனைத்துமே நூறு நாட்களுக்கு மேல் ஓடின’ என்று சொல்வார்கள். தற்போது டப்பாங்குத்து படங்களெல்லாம் நூறு நாட்கள் ஓடுகின்ற நிலையில் உள்ளது.  ‘ஞானச்செருக்கு’ படத்தை போல் எஸ்.பி.முத்துராமனால் இயக்க முடியாதா? காட்சிப்படுத்த முடியாதா? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அதற்கு விடை சொல்ல முடியாது. இதுதான் தலைமுறை இடைவெளி. இதுதான் இந்த ஞானச்செருக்கு படத்தின் கதை கருவும் கூட...” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்