Skip to main content

பெற்றோரை இழந்த மாணவியின் கனவை நிறைவேற்றிய சூர்யா

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

surya's agaram foundation helped major dr krishnaveni

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக ‘அகரம்’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் படித்த பலர் மருத்துவராகவும், பொறியாளராகவும் முக்கிய இடங்களில் பணியாற்றிவருகின்றனர். அதில், மேஜர் டாக்டர் கிருஷ்ணவேணியும் ஒருவர். 7ஆம் வகுப்பு படிக்கும்போது தாய், தந்தையை இழந்த கிருஷ்ணவேணி, சிலரது உதவி மூலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்றார். அதில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பில் நடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், 196.75 என்ற கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து நூலிழையில் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். 

 

இதையடுத்து, சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் மூலம் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்ற கிருஷ்ணவேணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அவரது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தற்போது இராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் மருத்துவராக கிருஷ்ணவேணி பணியாற்றிவருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்வியே நமது சமூகப் பாதுகாப்பு” - சூர்யா

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
suriya release book about school education and structure

சூர்யா திரைப்படங்களை தவிர்த்து அகரம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட பல உதவிகள் செய்து வருகிறார். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக வெளியிடும் 'வகுப்பறை உலகம்' என்ற புத்தகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “யாதும் இதழில் 'வகுப்பறை உலகம்' தொடராக வெளிவந்து தற்போது நூல் வடிவம் பெறுகிறது. அகரத்தின் வெளியீடாக வரும் இந்த நூல் கல்வியின் அடிப்படையையும் பிற நாடுகளின் கல்வியமைப்பையும் புரிந்து கொள்ள உதவும். உலகின் 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படியுள்ளன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் ஓர் ஆவணம். இந்த நூலை எழுதியுள்ள விஜயபாஸ்கர் விஜய்க்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கல்வியின் வாயிலாகச் சமூக மாற்றத்தில் பங்கெடுத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும். கல்வியே நமது சமூகப் பாதுகாப்பு” என குறிப்பிட்டுள்ளார். 

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தை கைவசம் வைத்துள்ளார். 

Next Story

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு 'ஜெய்பீம்'

Published on 24/01/2024 | Edited on 25/01/2024
Another jai bhim in Cuddalore District

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்தாஜ் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த நெய்வேலி காவல்துறையினர் மேல்பட்டாம்பாக்கம் அருகே பி.என் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கூலி தொழிலாளியை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அவரிடம் ஒரு வார காலம் விசாரணை செய்தனர். பின்னர் நெய்வேலி காவல்துறையினர் அவரின் கை மற்றும் கால்களின் நகங்களை பிடுங்கிய நிலையில் மிகவும் கவலைக்கிடமான முறையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் காவல்துறையினர் செய்ததை வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதை இயற்கை மரணமாக மாற்றுவதற்கு முயன்றதையெடுத்து இதுகுறித்து அவரது மனைவி ரேவதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இதனையொட்டி இந்த வழக்கு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 174 சந்தேக வழக்காக பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு சி பி சி ஐ டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் அப்போது நெய்வேலி காவல் ஆய்வாளராக இருந்த ராஜா தற்போது (வடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார் ) இவருடன் உதவி ஆய்வாளராக இருந்த செந்தில்வேல் மற்றும் காவலர் சௌமியன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி சிபிசிஐடி காவல்துறையினர் கொலை அல்லாத மரணம் என்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதை அறிந்து கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினர் மாவட்டம் முழுவதும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை மற்றும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி எஸ்.டி பிரிவுகளை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.

அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் ராஜா, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை குற்றவாளியான ராஜாவை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் மூலமும் பிற முக்கிய நபர்கள் மூலமும்  சுப்பிரமணியன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நெருக்கடிகளும் பிரச்சனைகளும் கொடுத்து வந்தனர்.

கொலை வழக்கு மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளிகளான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டியும் விடுவிக்க கோரியும் மனு தாக்கல் செய்தனர்.

இதனால் சுமார் ஒரு வருடமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரேவதியின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் திருமூர்த்தி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 11.1.2024 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 2 மாதத்திற்குள் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஜனவரி 24-ஆம் தேதி கடலூர் சிறப்பு எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜீவக்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் ஜோதிலிங்கம், லெனின், மேரி, சுரேஷ், ஆழ்வார், பரமேஸ்வரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், வாதியான ரேவதி மற்றும் குற்றவாளியான ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், சௌமியன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

3 மாதத்தில் தண்டனை கிடைக்கும் என தெரிந்தும் ராஜா அதுவரை எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இதை கேட்டால் சக காவலர்களை மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் இவர் செய்யும் செயலால் கூட இருக்கும் காவலர்களுக்கும் பிரச்சனை ஏற்படலாம் என்ற பயம் உள்ளது என  காவல்துறையினரே கூறுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்மாபுரம் காவல் நிலையத்தில் செங்கேணி என்பவரின் கணவர் ராசாகண்ணுவை கம்மாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் திருட்டு வழக்கில் அழைத்துச் சென்று அவரை கொலை செய்த சம்பவத்திற்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு தண்டனை கிடைத்தது.  இதை ஜெய்பீம் படம் மூலம் அனைத்து மக்களுக்கும் எளிய முறையில் காட்சிப்படுத்தப்பட்டது. அதே பாணியில் மீண்டும் ஒரு கொலை பக்கத்துக் காவல் நிலையமான நெய்வேலி காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.