Skip to main content

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்" - சூர்யா ரசிகர் மன்றம் அறிக்கை 

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

surya fans club talk about jai bhim movie issue

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர். 

 

இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாக சித்தரித்துள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக காட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப்  பலர் அறிக்கை வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாமக, பாஜக கட்சிகளுக்கு எதிராகப் பதிவிட்டுவருகின்றனர். 

 

ad

 

இந்நிலையில், ரசிகர்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பிவருவதையும் நாம் கவனிக்கிறோம். சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு. சூர்யா அண்ணன் எந்த சாதி, மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைதளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். ‘சமூகம் பயன் பெற’ என்று அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்