Skip to main content

நீங்க கட்சி ஆரம்பிங்க... வேண்டாம்னு சொல்லல... கமல் மீது சுரேஷ் காமாட்சி பாய்ச்சல்! 

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
suresh kamatchi

 

உலகநாயகன் கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்த ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன் தயாரிப்பில் 19வது படமாக உருவாகியிருக்கும் படம் 'மரகதக்காடு'. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசியபோது.... "ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்ற்ன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.

 

 

  

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை. நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க...மக்களுக்கு நல்லது செய்யுங்க...வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது செய்யவேண்டும். அதன்பின் மற்றவர்களுக்கு நல்லது செய்யலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்