Skip to main content

"விஷால் சொன்னது ஒரு எச்சரிக்கை உணர்வு" - தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

sr prabhu about vishal small budget speech

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,  ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இறுகப்பற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பேசும்போது, “பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம். யுவராஜ் மென்மையாக பேசக்கூடியவர். ஒரு குழந்தை மாதிரி என்று சொல்லலாம். மல்டி ஸ்டார் படம் தயாரிப்பது என்பது ஒரு தயாரிப்பாளருக்கு கஷ்டமான விஷயம். யாருடைய மனமும் கோணாமல் படத்தை எடுக்க வேண்டும். அதை இறுகப்பற்று படத்தில் அழகாக செய்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ். இந்த படம் பற்றி பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாத நிலையில், என்னை பார்க்கும் திரை உலகைச் சேர்ந்த பலரும் இந்த படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டோமே என்று பாராட்டினார்கள். அப்புறம் தான் அதன் பின்னணியில் எடிட்டர் மணிகண்டன் பாலாஜி இருக்கிறார் என்பது தெரிய வந்தது. 

 

இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரிடம் தான் நான் உரிமையாக கேட்க முடியும். படத்தில் ஸ்ரத்தாவின் கதாபாத்திரம் அவருக்கென அளவெடுத்து தைத்தது போல கச்சிதமாக இருந்தது. என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி இந்த படத்தில் நடிக்க நான் தயார் என விதார்த் ரொம்பவே ஆர்வம் காட்டினார். அபர்ணதி படத்திற்காக எடையை கூட்டி குறைக்க என ரொம்பவே மெனக்கெட்டார். படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருக்கு என்கிற சந்தோஷத்தில் இப்போது பேசுகிறேன். என் மனைவிக்கு இந்த படத்தை போட்டு காட்டினேன். நீங்கள் பார்த்து விட்டீர்களா என கேட்டபோது ஆம் என்றேன். அப்ப ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். அப்போதே இந்த படத்தின் மீது நம்பிக்கை வந்து விட்டது. நிச்சயமாக இந்த படம் ஒரு பிரச்சாரமாக இருக்காது.

 

கடந்த சில நாட்களாக சின்ன பட்ஜெட் படங்கள் பற்றி ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையும் ஒரு சிறு பட்ஜெட் படமாகத்தான் பார்க்கிறேன். சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே எந்த ஓடிடிடியில் வெளியாகிறது என்று தான் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை உருவாகி இருக்கிறது. ஆனால் சின்ன படங்கள் மூலமாகத்தான் தங்களது எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என பல கலைஞர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். சின்ன படங்களும் சினிமாவை தாங்கி தான் பிடிக்கின்றன. சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்கென ஒரு வியாபாரம் அப்போதிருந்தே இருந்ததில்லை. சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது. சிறு படங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு. அதுக்கு எதிராக சொல்லப்படும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சமீபத்தில் விஷால் சொன்னது ஒரு எச்சரிக்கை உணர்வால் சொல்லப்பட்டது தான்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்