தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் இன்று (07.05.2024) அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வணக்கம், மக்களின் நம்பிக்கையையும், நல் ஆதரவையும் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன். 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7. இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.
திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டு. 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, சேகர்பாபு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.