இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்நியன்’. படம் வெளியானபோது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்று, நடிகர் விக்ரமிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது. இதையடுத்து, இயக்குநர் ஷங்கர் பல வருடங்கள் கழித்து ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்தார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இப்படத்தை பென் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன், கதை உரிமம் தன்னிடம் இருக்கும் நிலையில் தன்னுடைய அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதமானது என இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் கதை உரிமத்தில் மோதல் எழுந்தது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பிரபல பாலிவுட் நடிகரையும் ஜாக்கி சான் இருவரையும் வைத்து இந்தியில் ரீமேக் செய்யவுள்ளேன். ஜாக்கி சானை பல வருடங்களாக நன்கு தெரியும். கமல் நடிப்பில் நான் தயாரித்திருந்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அவர் வந்திருந்தார். அடுத்த ஆண்டு ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் பணிகளைத் தொடங்க உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.