Skip to main content

அண்ணனுக்காக ரவுடியை அடித்த ரஜினி - சபிதா ஜோசப் பகிரும் சிவாஜியின் மறுபக்கம்  

Published on 21/08/2024 | Edited on 21/08/2024
sabitha joseph about rajinikanth

கலைமாமணி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப்பை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது அவர் திரைத்துறை பிரபலங்களின் வாழ்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். 

அப்போது ரஜினிகாந்த் குறித்து அவர் பேசுகையில், “திரைத்துறையில் 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினி, அவரின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிகுப்பம் ஊர்தான். இப்போது கூட அவரின் பூர்வீக வீடுகள் அங்கேதான் இருக்கிறது. அதன் பிறகு அவரின் அப்பா பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு ஒரு காவல் நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக வேலை பார்த்தார். சின்ன வயதாக இருக்கும்போதே ரஜினியின் அம்மா இறந்துவிட்டார். அண்ணன் சத்யநாராயனுக்குதான் அவர் பயப்படுவார். நாகேஷ்வர் ராவ் என இன்னொரு அண்ணன் அவருக்கு இருக்கிறார். இந்த அண்ணன் மிகவும் மென்மையான பண்புடையவர். ரஜினியும் நாகேஷும் நண்பர்கள்போல பழகுவார்கள். ரஜினி அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்தில்தான் படித்தார். 

மூத்த அண்ணன் ராணுவத்தில் பணியாற்றினார். இளைய அண்ணன் அலுவலகம் ஒன்றில் பெரிய போஸ்டிங்கில் இருந்தார். இவர்கள் சம்பாதிக்கும்போது, அப்பா ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக இருந்தார். அவருக்கு பென்சன் அப்போது ரூ.30 வழங்கப்பட்டது. அந்த பணத்தில் சின்ன பொட்டி கடை திறந்து, மிச்ச பணத்தில் வீடு கட்டிவிட்டார். இப்படி இருக்கும் பட்சத்தில் போதுமான அளவு வருமானம் இல்லாததால் ரஜினிக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஒரே மாதிரியான துணி வாங்கி அதைப் பிரித்துக் கொடுத்தார். அந்த அளவிற்குப் பகிர்ந்து வாழும் சூழலில்தான் ரஜினி வாழ்ந்தார். சிவாஜி என்றுதான் அவரை நண்பர்கள் அழைப்பார்கள். அப்போது மிகவும் கோபக்காரராக இருந்தார். அதன் பிறகு ராமகிருஷ்ணா மடத்தில் படிக்கும்போதுதான் ஆன்மிகத்தைத் தெரிந்து கொண்டு கொஞ்சம் பக்குவப்பட்டவராக வளர்ந்தார். அதே நேரத்தில் ரவுடிதனமும் பண்ணியிருக்கிறார். 

படிப்பை முடித்துவிட்டு  மாதம் 60 ரூபாய் சம்பளத்தில் ஒரு கன்னட பத்திரிக்கையில் பிழை திருத்துபவராக பணியில் சேர்ந்தார். அப்போது முதல் மாத சம்பளத்தில் சிகரெட் பாக்கெட் வாங்கினேன் என்றெல்லாம் கணக்கு சொல்லியிருக்கிறார். நண்பர் வட்டம் அதிகமாக இருப்பதால் எப்போதும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தார். நிறைய எம்.ஜி.ஆர் படம் விரும்பி பார்ப்பார். ரஜினியின் மன்னன் படத்தில் வரும் தியேட்டரில் டிக்கெட் வாங்கும் காட்சி போல நிஜ வாழ்க்கையிலும் செய்திருக்கிறார். ரஜினி டிக்கெட் வாங்க வரும்போது சிவாஜி வந்துட்டான் டா... என வழி விடுவார்கள். வழிவிடவில்லை என்றால் அவர்களின் தலைக்கு மேல் ஏறி போவார், சில நேரம் அடித்தும் விடுவார். அந்த மாதிரியான சுபாவம் கொண்டவர்தான் ரஜினி. 

ஒருமுறை ரஜினியின் சின்ன அண்ணனை அங்குள்ள பெரிய ரவுடி ஒருவர் ஓங்கி அறைந்துவிட்டார். இதை வீட்டிலுள்ள எல்லோரும் சிவாஜியிடம் சொல்லாமல் மறைத்துவிட்டனர். அதன் பிறகு அன்று இரவு 10 மணிக்கு அவரின் அண்ணன் ‘டேய் சிவாஜி நாராயண ரவுடி என்ன அடுச்சுட்டான்டா... கன்னம் வீங்கிருச்சு டா’ என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்டதும் ரஜினி கோபத்தில்  ‘ஏன் அடிச்சான் ... எதுக்கு அடிச்சான்... இப்போ எங்க இருக்கான் அவன்’ என்று கேட்டுள்ளார். உடனே நண்பர்களை அழைக்கலாமா...இல்லை நாளைக்கு காலைல அடிக்கலாமா...காலைல அடுச்சா போலீஸூக்கு தெரிஞ்சுரும்... என்று பல கோணங்களில் யோசித்துள்ளார்.

அதன்பின்பு அன்றைக்கு இரவே அந்த ரவுடியை அடிக்க சைக்கிள் செயினை எடுத்துக்கொண்டு, தனக்கு பழக்கமான ஒரு இடத்தில் தண்ணி அடித்துவிட்டு சண்டைக்குப் போகிறார். அங்கு சென்று  ‘டேய் நாராயணா ஒண்டிக்கு ஒண்டி வாடா’ என்று ரவுடி இருக்கும் ஏரியாக்குள் போய்விட்டார். அந்த ஏரியா முழுவதும் அந்த ரவுடியை பார்த்து பயப்படுவார்கள். இருந்தாலும் அந்த ரவுடி அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்திருந்தபோது, அங்கு சென்று அவனை பின் பக்கத்தில் மிதித்து தள்ளிவிட்டு, விரட்டி விரட்டி சைக்கிள் செயினால் அடித்தார். அதன் பிறகு வீட்டுக்கு சென்று யாருக்கும் தெரியாமல் படுத்துக்கொண்டார். காலையில் அவரின் அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் ‘ஏண்டா அவன அடிச்ச... நாளைக்கு வீட்டு முன்னாடி வந்து பிரச்சனை பண்ணுவான்’ என்று சொல்லித் திட்டியுள்ளார். அதற்கு ரஜினி  ‘இனிமே அவன் வர மாட்டான்’ என்று கூறியிருக்கிறார்” என்று பகிர்ந்தார். 

சார்ந்த செய்திகள்