Skip to main content

"புது கனவு உருவாகி இருக்கிறது; அது விரைவில் நடக்கும்" - ரஜினிகாந்த் நம்பிக்கை

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

rajinikanth about Nita Mukesh Ambani Cultural Centre

 

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி, இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை விளக்கும் வகையில், 'நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்' என்ற பெயரில் 4 அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தில் கலாச்சார மையத்தை தொடங்கியுள்ளார். இதில் 2000 இருக்கைகள் கொண்ட அரங்கம், கலைநிகழ்ச்சிகளுக்கான அரங்கம், ஸ்டுடியோ போன்றவை இடம்பெற்றுள்ளன. 

 

மும்பையில் அமைந்துள்ள இந்த கலாச்சார மையத்தின் தொடக்க விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் கலந்துகொண்டார். மேலும், சல்மான் கான், அமீர்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷ்ரத்தா கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொன்னியின்செல்வன்-2 பணிகளால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தொடர்பாக நீதா மற்றும் முகேஷ் அம்பானிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் முதல் ஆடம்பரமான உலகத்தரம் வாய்ந்த பெரிய கலை அரங்கம் மும்பையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கிய என் அருமை நண்பர் முகேஷ் அம்பானிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள். இதுபோன்ற அற்புதமான தேசபக்தியுடனான மனதைக் கவரும் நடன நிகழ்ச்சிக்காக நீதா அம்பானி மற்றும் அவரது குழுவிற்கு வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த அற்புதமான அரங்கில் நடிக்க வேண்டும் என்ற புது கனவு இப்போது உருவாகி இருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தனது 170வது படத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்