Skip to main content

தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர்- தயாரிப்பாளர் கே. ராஜன்

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

வெற்றிமாறன் - தனுஷ் ஆகிய இருவரும் அசுரன் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி சேருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு வடசென்னை படம் வெளியான ஒரு வாரத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதனை அடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்து ரிலீஸுக்கு தயராக இருக்கிறது.
 

dhanush

 

 

கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் ஐம்பது வயது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம்தான் மஞ்சு வாரியருக்கு முதல் படம்.

அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் தாணுவைப் பற்றிப் தனுஷ் பேசுகையில், "அசுரன் போன்ற ஒரு படம் எனக்கு அமைந்ததற்கும், அதை எனக்கும் வெற்றிக்கும் எந்தக் குறையுமின்றி ஆதரவாக நின்று தயாரித்ததற்கும், தாணு அவர்களுக்கு நன்றி. அவரிடம் இயக்குனர் யார் என்று மட்டும் தான் நான் சொன்னேன். கதை என்ன என்று மற்ற விபரங்கள் எதையும் கேட்காமல் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எடுத்தார் தாணு சார்.

இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதரணமான விஷயம் கிடையாது. பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பிக்கும் முன்பே தாணு சார் எனக்கு முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்.அந்த நேரத்தில் அது எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதற்கு என்றைக்குமே நான் நன்றியோடு இருப்பேன். படம் கண்டிப்பாக வந்து பல அதிசயங்கள் செய்யும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

இந்த பேச்சிற்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து சர்ச்சை பேச்சுக்கள் எழுந்திருக்கிறது. தயாரிப்பாளர் ராஜன் கூறியது. “தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர். கடன் வாங்கித்தான் பட அதிபர்கள் படம் எடுக்கின்றனர். கதாநாயகன் மற்றும் டைரக்டர் செய்யும் தவறுகளால் படப்பிடிப்பு காலதாமதமாகி வட்டி அதிமாகி விடுகிறது. ரூ.10 கோடிக்கு எடுத்த படத்தை ரூ.8 கோடிக்குத்தான் விற்க முடிகிறது. இதனால் வீடு சொத்துகளை இழந்து நிற்கிறார்கள்.

ஆனால் தனுஷ் போன்ற நடிகர்கள் ஆடம்பர கார்களில் வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று சில நடிகர்கள் சொந்தமாக படம் எடுத்து நஷ்டமடைந்த நிலைமையும் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டுவதை தனுஷ் நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்