Skip to main content

விமல் பட விவகாரம்; கண்ணீர் வடித்த தயாரிப்பாளர் மகள்

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

producer ganesan daughter complaint against actor vimal

 

‘களவாணி’, 'களவாணி 2', ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, மன்னர் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான விமர் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் கோபி என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு நடிகர் விமல் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனிடையே தயாரிப்பாளர் சிங்காரவேலனும் நடிகர் விமல் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

 

இந்நிலையில் 'மன்னர் வகையறா' படத்தின் பணிகளை தொடங்கிய திருப்பூர் கணேசனின் மகள் ஹேமலாத என்பவர் விமல் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் இந்த புகார் தொடர்பாக கண்ணீர் மல்க பேசிய அவர்,"எனது தந்தை கணேசன் திருப்பூரை சேர்ந்த தயாரிப்பாளர் கணேசன். அவருக்கு இருந்த சினிமா மோகத்தை பயன்படுத்தி நடிகர் விமல் மூளைச்சலவை செய்து மன்னர் வகையறா படத்தை தயாரிக்க வைத்தார். படத்தின் பட்ஜெட் ரூ. 5 கோடி என்றும், நீங்கள் 1.5 கோடி முதலீடு செய்தால் போதும், மீதி தொகையை சினிமா துறையில் உள்ள சில பைனான்சியர்களிடம் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவாதம் அளித்தார். அதன் பிறகு எனது தந்தை கணேசன் மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் சில பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வெறுத்துப்போன என் தந்தை படப்பிடிப்பை தொடர மனம் இல்லாமல் மன்னர் வகையறா கைவிடுவதாக கூறினார். 

 

இதையடுத்து எனது தந்தையை சந்தித்த விமல் இந்த படத்தை நிறுத்த வேண்டாம். இதை நம்பித்தான் என்னுடைய எதிர்காலம் உள்ளது. அதனால் நான் வேறு தயாரிப்பாளரை வைத்து படம் எடுத்துக்கிறேன். உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் திருப்பி தந்து விடுகிறேன் என உறுதியளித்தார். ஆனால் அவர் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் எனது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு விமல் தனது தந்தையுடன் சமரசம்  செய்து கொண்டு பணத்தை திருப்பி தந்துவிடுவதாக நீதிமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தின்படி பணம் தரவில்லை, படத்தின் மற்ற மொழிக்கான உரிமையையும் தரவில்லை. ஆனால் எங்களுக்கு தெரியாமல் தெலுங்கு மொழி டப்பிங் உரிமையை வேறு நபருக்கு விற்று எங்களை மோசடி செய்து விட்டார். இதனால் நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என கண்ணீர் மல்கத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்