பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் சக்சஸ் மீட் கடந்த மாதம் நடைபெற்றது.
இப்படம் மூலம் பிரபலமடைந்த பிரித்விராஜன், ஏற்கெனவே பலரது கவனத்தை பெற்றிருந்தார். இவர் இயக்குநர், நடிகர் பாண்டியராஜனின் மகன் மற்றும் வளர்ந்து வரும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பார்த்து வீடு தேடி வந்து விஜய் சேதுபதி பாராட்டியதாக பிரித்விராஜன் தெரிவித்திருந்தார். படத்தின் சக்சஸ் மீட்டிலும், “இப்படி ஒரு வெற்றிக்காகத்தான் நான் 18 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருந்தேன்… எல்லோரும் என்னை பாண்டியராஜனின் பையன் என்று சொல்லும் போது ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று கவலைப்பட்டேன்… ஆனால் இன்று ப்ளூ ஸ்டார் படம் அதை மாற்றியுள்ளது” என பேசியிருந்தார்.
இப்படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதையொட்டி அஷோக் செல்வன், “ஒற்றுமை, நட்பு, விளையாட்டுத்திறன், காதல் மற்றும் பலவற்றைப் பற்றி பேசும் மிகவும் சிறப்பான படம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதைப் பாருங்கள்” என குறிப்பிட்டு தனது மனைவி கீர்த்தி பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்
இந்த நிலையில், பிரித்விராஜன் அவரது அப்பா ப்ளூ ஸ்டார் படம் பார்த்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “இது உங்களுக்கானது, அப்பா. ப்ளூ ஸ்டார் படத்தில் என்னைப் பார்க்கும்போது உங்கள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியைப் பார்ப்பது மிகப்பெரிய வெகுமதி. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு உங்களை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.