Skip to main content

“‘ருத்ரதாண்டவம்’ படத்தை தடை செய்து மோகன் ஜியை கைது செய்யுங்கள்” - பரபரப்பை ஏற்படுத்திய புகார்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

ruthra thandavam

 

ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'திரௌபதி' திரைப்படம், கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவியபோதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, 'திரௌபதி' கூட்டணி ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்க, சின்னத்திரை புகழ் தர்ஷா குப்தா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள படக்குழு, அதற்கான முன்னோட்டமாக கடந்த மாதம் 24ஆம் தேதி படத்தின் ட்ரைலரை வெளியிட்டது. மோகன் ஜியின் முந்தைய படத்தைப்போல இப்படத்திலும் சர்ச்சையான கருத்துகள் நிறைந்திருந்த நிலையில், படத்தின் ட்ரைலர் யூடியூப் தளத்தில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

 

இந்த நிலையில், ‘ருத்ரதாண்டவம்’ பட ட்ரைலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும்படியாகவும், மதக் கலவரத்தைத் தூண்டும்படியாகவும் உள்ளதால் இப்படத்தைத் தடை செய்து, இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்ய வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் பேராயர் சாம் ஏசுதாஸ் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்ய வேண்டும் என டி.ஜி.பி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்