Skip to main content

‘பிச்சைக்காரன் 2' பட வழக்கு - விஜய் ஆண்டனிக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

pichaikkaran 2 release issue update

 

‘பிச்சைக்காரன்’ பட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படம் கடந்த 14 ஆம் தேதி (14.04.2023) வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. 

 

இதையடுத்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தயாரிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் தனது அனுமதி இல்லாமல் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ரூ. 10 லட்சம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் ஆண்டனி பதிலளிக்க வேண்டி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் கடந்த மாதம் 29ஆம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவில், "ஆய்வுக்கூடம் படம் குறித்த தகவல் எதுவும் தனக்கு தெரியாது. அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லை. வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்தேன். பிச்சைக்காரன் 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படம் வெளியாவதை தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படம் வெளியாவது தள்ளிப் போனதால் பொருளாதார ரீதியாக எனக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. மேலும் மன உளைச்சலால் வேதனை அடைந்தேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இதையடுத்து நீதிபதி எஸ்.சௌந்தர் இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விஜய் ஆண்டனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் வருகிற மே 19 ஆம் தேதி (19.05.2023) திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்