Skip to main content

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.