Skip to main content

"அவனுக்கும் தாய், தங்கை, மகள் இருக்கும்" - சமந்தா பாடல் சர்ச்சை குறித்து கவிஞர் விவேகா பேட்டி!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

 lyricist Viveka

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வாவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் சமந்தா நடனமாடியுள்ள குத்து பாடல் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழில் இப்பாடலை எழுதிய கவிஞர் விவேகாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய கவிஞர் விவேகா, 'ஊ சொல்றியா... ஊஊ சொல்றியா...' பாடல் சர்ச்சை குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

ad

 

இந்தப் பாடல் பெரிய வெற்றியடையும் என்று எனக்கு முன்னரே தெரியும். பாடலின் டியூன், வரிகள் எல்லாம் சிறப்பாக அமைந்தன. ஒரு பாடல் பதிவிற்காக கோவா சென்று கொண்டிருந்தேன். அப்போது விமான நிலையத்தில் வைத்து 'ஊ சொல்றியா... ஊஊ சொல்றியா' பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளேதே... அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டார். நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் என்று அவரிடம் கூறினேன். படைப்பு சுதந்திரம் என்ற ஒன்று இருக்கவேண்டும். எல்லா ஆண்களையும் இந்தப் பாடலில் நாம் குறிப்பிடவில்லை. கேளிக்கை விடுதிக்கு போகக்கூடிய ஆண்களைத்தான் இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ளோம். பெண்களை பூ என்று சொல்கிறோம். ஆண்களை வண்டு என்று சொல்கிறோம். பெண்களை நாம் சுற்றிச்சுற்றி வருவதை கௌரவமாக சொல்லிக்கொள்கிற ஆண்களாக இருக்கிறோம். அப்படி இருக்கையில் இந்தப் பாடலுக்கு ஏன் கோபித்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

 

கேளிக்கை விடுதியில் நடனமாடும் பெண் தான் சந்தித்த ஆண்களை பற்றி இந்தப் பாடலில் கூறுகிறாள். பெண்களை நம்பாதே, பெண் எனும் மாயப்பிசாசு என்று ஒருவர் எழுதுகிறார் என்றால் எந்தப் பெண்ணால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ அந்தப் பெண்ணைத்தான் குறிப்பிடுகிறார். சீறி வரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று எழுதுகிறோம் என்றால் அனைத்து பெண்களையும் குறிப்பிட்டு அதை எழுதுவதில்லை. அவனுக்கும் தாய், தங்கை, மகள் இருக்கும். பெண்களை கேலி செய்து ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்திருக்கின்றன. ஆண்களை கேலி செய்து ஒரு பாடல் வந்ததற்கு நாம் இப்படி குதிக்கலாமா என்பதுதான் என்னுடைய கேள்வி. வெகுசிலர்தான் இதை எதிர்க்கிறார்கள். என்னிடம் பேசியவர்கள் அனைவரும் இந்தப் பாடலை பாராட்டத்தான் செய்கிறார்கள். ஸ்க்ரீனே தெரியாத அளவிற்கு இந்தப் பாடலுக்கு திரையரங்கில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் சங்கம் எதிர்க்கிறது என்கிறார்கள்; ஆனால் ஆண்களின் சங்கமம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. 

 

ஒரு ஐட்டம் சாங்கை பெண்கள் கொண்டாடுவது இதுதான் முதன்முறை. கருத்தியல் ரீதியாக எடுத்துக்கொண்டு பெண்களும் இப்பாடலைக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பாடல் இவ்வளவு உயரத்தை அடைந்தது மகிழ்ச்சிதான். இந்தப் பாடலை முழு சுதந்திரத்துடன் எழுதுங்கள் என்று தேவி ஸ்ரீ பிரசாத் சார் கூறினார். பாடலில் நான் பயன்படுத்தியிருந்த ஆம்பள புத்தி என்ற வார்த்தையை தேவி பிரசாத் சாருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் பாடல் முழுவதும் அது வருவதுபோல எழுதினோம். அதன் பிறகு ஆம்பள புத்தி பாடலாக இது மற்ற மொழிகளுக்கும் போனது. இந்தப் பாடலின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் சாரின் ரசனையும் முக்கிய காரணம்.

 

 

சார்ந்த செய்திகள்