Skip to main content

உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்; தி கேரளா ஸ்டோரி படக்குழு கோரிக்கை

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

the kerala story producers case against Tamil Nadu

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர். 

 

முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இப்படத்திற்குத் தடைவிதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிபதி, வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

 

இதனிடையே தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிடத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். வெறுப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் திரையிடப்படமாட்டாது என்பதை எதிர்த்துப் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "தமிழ்நாட்டு திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் மம்தா பானர்ஜி அறிவித்த தடையை நீக்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்