Skip to main content

'கழுகு 2' படத்தின் கதை இது தான் !

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
kazhugu 2

 

 

 

'கழுகு' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கிருஷ்னா - பிந்து மாதவி இணைந்து தற்போது பிரமாண்டமாக தயாராகி வரும் 'கழுகு 2' படத்தில் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை இயக்கிய சத்யசிவா இயக்கும் இப்படத்தில் காளி வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் கதை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி... "அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்த முதலமைச்சரையும் தேடுவதற்காக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அடர்ந்த காட்டுக்குள் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலோடு ராணுவ வீரர்கள் சல்லடை போட்டு தேடுகிறார்கள். எங்கு தேடியும் நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களோ, அதில் பயணம் செய்த முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை. 

 

 

 

காட்டின் பெரும்பகுதியை தேடுவதற்கு உதவிய உள்ளூர் கிராம மக்கள் காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு வர மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அந்த காட்டு பகுதியில் வாழும் செந்நாய்கள். மிருகங்களிலேயே  போர்க்குணம் மிக்க மிருகமென்றால் அது செந்நாய் தான். இரண்டு செந்நாய்கள் சேர்ந்தால் ஒரு சிங்கத்தையே வீழ்த்தி விடும். அப்படிப்பட்ட செந்நாயால் உயிருக்கு ஆபத்து என்பதால் உள்ளூர் மக்கள் வர மறுக்க, ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக செந்நாய்களை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா வரவழைக்கப்படுகிறார். ஹெலிகாப்டரை தனி ஆளாக தேடி அதன் நிலையை கண்டுபிடித்து தருவதாக கூறி செந்நாய் காட்டிற்குள் செல்கிறார் கிருஷ்ணா".

 

 

 

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே மூன்று செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் பிரம்மாண்ட சண்டை காட்சி சமீபத்தில் மூணார் காட்டு பகுதியில் படமாக்கப்பட்டது.  நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களின் உடையணிந்த துணை நடிகர்களோடு, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஹெலிகாப்டரை தேடி காட்டிற்குள் நுழையும் ஆரம்ப காட்சி மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. 'புலிமுருகன்' படத்தில் புதுவித உத்திகளோடு மோகன்லால் புலியை வீழ்த்துவதை போல வித்தியாசமான உத்திகளை பயன்படுத்தி செந்நாயை கிருஷ்ணா வீழ்த்துவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தின் இறுதி காட்சியிலும் செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் காட்சி படமாக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராபிக்ஸ்   காட்சிகள் இடம் பெற போகும் இந்த படத்தின் பட்ஜெட் கிருஷ்ணா நடித்த படங்களிலேயே அதிகபட்ச பட்ஜெட் படமாக மிக பிரமாண்ட அளவில் தயாராகி வருகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்