Skip to main content

“இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களிலே நடிக்க அழைக்கின்றனர்” - கலையரசன் ஆதங்கம்

Published on 07/01/2025 | Edited on 07/01/2025
kalaiyarasan speech in madraskaran press meet

எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்கும் படம் மெட்ராஸ்காரன். திரில்லர் டிராமாவாக உருவாகும் இப்படம் ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதை விவரிக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய கலையரசன் படம் குறித்து நிறைய விஷயங்களை பேசியிருந்தார். அப்போது தனது ஆதங்கத்தையும் வைத்திருந்தார். அது குறித்து அவர் பேசியதாவது, “இனிமேல் நான் ரொம்ப கதாபாத்திரத்தில் நடிக்க போவதில்லை. ஏனென்றால் இங்கு நான் ஆரோக்கியமாக இல்லை என நினைக்கிறேன். மலையாளத்தில் நிறைய நடிகர்கள் மல்டி ஸ்டாரர் படம் பண்ணுவார்கள். இங்கேயும் இருக்கு. ஆனால் குறைவாக இருக்கிறது. அங்கு ஹீரோவாக நடிப்பார்கள், பின்பு திடீரென பெரிய படத்தில் சின்ன ரோல் நடிப்பார்கள், பின்பு நெகடிவ் ரோலும் நடிப்பார்கள். இங்கு ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்தால். அது மாதிரியே எல்லா கதாபாத்திரமும் வருகிறது. கதை எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை எழுதிவிடுவார்கள் என நினைக்கிறேன். அது பரவாயில்லை. நன்றாக நடித்தால் பாராட்டுகிறார்கள்.

அதே சமயம் கிண்டல் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நல்ல விதமாக சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன். இருந்தாலும் ஒரு கதை படமாக்கப்படும் போது. அதில் யார் வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம். அந்த கதையிலே நம்மை இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களிலே நடிக்க அழைக்கின்றனர். அது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. அது ஆரோக்கியமானது கிடையாது. அதனால் இனிமேல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்