Skip to main content

"உங்களுக்கு நான் முக்கியமில்லை, எனக்காக கலைஞரை பகைச்சுக்காதீங்க..." பெருந்தன்மையுடன் கூறிய எம்.ஜி.ஆர்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆர் பக்கம் செல்வதா, கலைஞர் பக்கம் செல்வதா என்று குழம்பியிருந்த சொர்ணத்திற்கு எம்.ஜி.ஆர் எப்படி வழிகாட்டினார் என்பது குறித்தும், 'தங்கத்திலே வைரம்' படம் தொடங்கப்பட்டது குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகிய பிறகு கலைஞரும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் அணியாகிவிட்டனர். இது சொர்ணத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தியது. காரணம், சொர்ணம் இருவருக்கும் நெருக்கமாக இருந்தவர். சொர்ணத்திற்குக் கலைஞர் கருணாநிதி நெருங்கிய சொந்தம். கலைஞர் மூலமாகத்தான் வசனம் எழுத சொர்ணம் வந்தார். அப்படி வந்தவர் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாகிவிட்டார். வசனம் எழுதியதற்காகச் சொர்ணத்திற்கு எம்.ஜி.ஆர் வீடெல்லாம் வாங்கிக்கொடுத்திருந்தார். ஆகையால், எம்.ஜி.ஆருடன் செல்வதா கலைஞருடன் செல்வதா என்று சொர்ணத்திற்கு ஒரே குழப்பம். நேராக எம்.ஜி.ஆர் தோட்டத்திற்குச் சென்ற சொர்ணம், "இதுவரை நான் வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பது உங்களை வைத்துதான்... நான் எதிர்பாராத ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்துவிட்டீர்கள்... அதே நேரத்தில் கலைஞர் என்னுடைய தொப்புள்கொடி உறவு. அவரையும் என்னால விடமுடியாது... இப்ப நான் என்ன செய்றது" என்கிறார். உடனே எம்.ஜி.ஆர், "எந்தக் காரணத்திற்காகவும் உன் உறவை நீ பகைத்துக்கொள்ளாதே... வசனம் எழுதுறதுக்கு எனக்கு ஆளா இல்லை... நான் உனக்கு வீடு வாங்கிக்கொடுத்தது நீ அர்ப்பணிப்புடன் வேலை பார்த்த காரணத்திற்காகத்தான்... அதைப் பற்றியெல்லாம் நீ யோசிக்காத... நீ கலைஞர் பக்கமே இரு" என்று கூறி அனுப்பிவைத்தார். இதுதான் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை. அதைக்கேட்டு கண்ணீர் மல்க அங்கிருந்து வெளியேறினார் சொர்ணம். 

 

பின்பு சொர்ணம் தனியாக சில படங்கள் எடுத்தார். 'தங்கத்திலே வைரம்' படம் குறித்த அறிவிப்பை நான் வெளியிட்டிருந்ததைப் பார்த்து என்னைச் சந்திக்க என் வீட்டிற்கு வந்தார். டைட்டில் நல்லா இருக்குது என்று கூறி அந்தப்படம் பற்றி விசாரித்தார். அது எம்.ஜி.ஆர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதற்காக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு அண்ணா கொடுத்த ஐடியாதான் அந்தப்பட அறிவிப்பு என்றும் அப்படி ஒரு படம் எடுக்கும் திட்டம் இல்லையென்றும் கூறினேன். அந்த டைட்டில் எனக்குத் தரமுடியுமா என்றார். நான் சரி தருகிறேன் எனக் கூறிவிட்டேன். அந்த டைட்டிலுக்குப் பொருத்தமான கதை எழுதித்தருமாறு என்னிடம் சொர்ணம் கேட்டார். நான்தான் அந்தப்படத்திற்கு கதையெழுதினேன். 

 

'தங்கத்திலே வைரம்' கதை இரண்டு ஹீரோ கதை. அந்தப்படத்தில் சிவகுமாரும் கமல்ஹாசனும் இணைந்து நடித்தனர். ஸ்ரீபிரியாவும் ஜெயசித்ராவும் கதாநாயகிகளாக நடித்தனர். கதையின்படி, சிவகுமாரும் கமல்ஹாசனும் பாடகர்கள். இவர்கள் ஸ்ரீபிரியாவும் ஜெயசித்ராவும் படிக்கும் கல்லூரிக்குப் பாடச் செல்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுவிடுகிறது. முழுக்க முழுக்க காமெடியாக உருவாகியிருந்த இப்படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

 

அந்தப்படம் தொடங்குவதற்கு முன்பு ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. மைசூரில் சூட்டிங் நடந்த திட்டமிட்டிருந்தனர். கதை சொல்வதற்காக சொர்ணம் என்னை மைசூருக்கு அழைத்துச் சென்றார். இங்கிருந்து சொர்ணம் காரிலேயே நாங்கள் இருவரும் சென்றோம். போகிற வழியில் ஒரு ஆஞ்சிநேயர் கோவிலொன்று இருந்தது. அங்கு வண்டியை நிறுத்திய சொர்ணம், "கலைஞானம் சார் இந்த ஆஞ்சிநேயர் கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு படத்தை ஆரம்பித்தால் நன்றாக ஓடும்னு சொல்றாங்களே... அதுபத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க" என்றார். "நான் நினைக்கிறத விட்டுவிடுங்க... உங்களுக்கு நம்பிக்கை இருக்கா" என அவரிடம் கேட்டேன். "எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் நான் கோவிலுக்கு போனால் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்களே" என்றார். 'நீங்கதான் கட்சியை விட்டு வெளியே வந்து படமெடுக்க ஆரம்பித்துவிட்டேர்களே பிறகு எதற்கு பயம்" என்றேன். சரி நான் போய் அர்ச்சனை பண்ணிட்டு வருகிறேன் எனக் கிளம்பியவர், எனக்கு உள்ளே போய் எப்படி சாமி கும்பிடுவது எனத் தெரியவில்லை என்றார். ஒரு சமயத்தில் தமிழ்நாட்டில் கோவில்களெல்லாம் காலியாக இருந்தன. இன்றைய தலைமுறையினருக்கு அது பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. அண்ணா, கலைஞர் செய்த பிரச்சாரத்தால் இளைஞர்கள் கோவிலுக்கே செல்லமாட்டார்கள். சாமி கும்பிடுபவர்களைக் கட்சியிலேயே வைத்துக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆரே மருதமலைக்கு ரகசியமாகத்தான் சென்றுவந்தார். 

 

பின், நானும் சொர்ணத்துடன் சென்று துளசி மாலை, வடையெல்லாம் வாங்கிக்கொடுத்து அர்ச்சனை செய்தோம். அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தைப் பட செட்டு முழுக்கத் தூவிவிட்டார். படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்தப்படத்தில் நான் வசனம் எழுதியதோடு ஒரு கேரக்டரும் நடித்தேன். எம்.ஜி.ஆர் ரசிகர்களை அமைதிப்படுத்துவதற்காக வைத்த டைட்டில் கடைசியாக சொர்ணத்திற்குப் பயன்பட்டது. அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் சிவகுமார், கமல், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா என அனைவருக்குமே நல்ல பெயர் கிடைத்தது. கதையாசிரியராக எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கும் நான்கைந்து கதைகள் விற்றன.

 

 

சார்ந்த செய்திகள்