Skip to main content

'நடிக்க வாய்ப்பு கேட்டேன்... போய் மிலிட்டரில சேருன்னு சொல்லிட்டாங்க...' கலைஞானத்தை அப்செட் ஆக்கிய கடிதம்!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

அந்தக்காலத்தில் எல்லா ஊர்களிலும் இரண்டு காட்சிகள்தான் படம் போடுவார்கள். மதுரையில் தியேட்டர் இருந்ததால் அங்கு மட்டும் வார இறுதிநாட்களில் மூன்று காட்சிகள் போடுவார்கள். மதுரையில் ஏதாவது புதுப்படம் போட்டார்கள் என்றால் என் நண்பர்கள் என்னை போய் பார்த்துவிட்டு வரச்சொல்வார்கள். நான் பார்த்துவிட்டு வந்து படம் நன்றாக இருக்கிறது என்று கூறினால் மற்றவர்கள் போய் பார்ப்பார்கள். அப்படி மதுரையில் சென்று நான் படம் பார்ப்பதற்காக என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காசு கொடுத்து என்னை அனுப்புவார்கள். நான் படம் பார்த்துவிட்டு வந்த பிறகு, எங்கள் ஊர் காளியம்மன் கோவிலில் உட்கார்ந்து அனைவருக்கும் கதை சொல்வேன். படம் பார்க்க காசு கொடுத்து அனுப்புகிறார்கள் என்றால் நான் எவ்வளவு சிறப்பாக கதை சொல்வேன் என்று யோசித்துப்பாருங்கள். 

 

நான் கதை சொல்வதைக் கேட்டு, ஏன்டா நீ படத்துல நடிக்கக்கூடாது என்று என் நண்பர்கள் கேட்டனர். நான் ஆள் பார்ப்பதற்கு செக்கசெவேரென்று இருப்பேன். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என்று அவர்களிடம் கூறினேன். ஏதாவது நடிகருக்கு லெட்டர் போட்டு அவர்களிடம் வாய்ப்பு கேள் என்று என் நண்பர்கள் கூறினார்கள். அந்தக் காலத்தில் ரிப்ளை கார்டு என்று ஒரு கார்டு இருக்கும். அதில் இரண்டு கார்டு இருக்கும். அதில் நாம் ஒரு அட்டையில் எழுதி அனுப்புவோம். மற்றொரு அட்டையில் அவர்கள் பதில் எழுதி அனுப்புவார்கள். ஒரு ரிப்ளை கார்டு வாங்கிவந்து அஞ்சலி தேவிக்கு ஒரு கடிதம் போட்டேன். உங்கள் தோட்டத்தில் ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள் என்றுதான் கடிதத்தில் எழுதினேன். அவர் வீட்டு தோட்டத்தில் வேலை செய்து அங்கிருந்து நடிக்க வாய்ப்பு வாங்கிவிடலாம் என்ற யோசனையில் தோட்ட வேலை கேட்டேன். சில நாட்கள் கழித்து அஞ்சலி தேவியிடம் இருந்து ஒரு லெட்டர் வந்தது. தற்போது ஆட்கள் தேவையில்லை என்று அஞ்சலி தேவியின் மேனேஜர் பதில் கடிதம் எழுதியிருந்தார்.  அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து மாடர்ன் தியேட்டருக்கு லெட்டர் எழுதினேன். அந்த லெட்டரில், நான் சினிமாவிற்கு தகுந்த உயரம், சிவந்த உருவம், அடர்ந்த முடி, அகன்ற நெற்றி, சரியான வரிசையில் பல் இருக்கும், நல்ல உடல்வாகு என என் தோற்றத்தைப் பற்றி எழுதியிருந்தேன். சில நாட்கள் கழித்து அதற்கு பதில் கடிதம் வந்திருந்தது. அதில், உங்கள் கடிதத்தை உன்னிப்பாக கவனித்தோம். நல்ல உயரமும் உடல்வாகும் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். எல்லா பொருத்தமும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் அப்படியே மிலிட்டரியில் போய் சேர்ந்துவிடுங்கள் என்று பதில் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதத்தை படித்துவிட்டு நானும் என் நண்பர்களும் அப்செட் ஆகிவிட்டோம். 

 

அடுத்த என்ன செய்யலாம் என்று நண்பர்கள் அனைவரும் சேர்ந்து யோசித்தோம். அப்போது வீட்டில் உட்கார்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருந்தால் சரிவராது... சென்னையில் சென்று வாய்ப்பு தேடு என ஒரு நண்பன் கூறினான். அதுவும் சரி என்று தோன்றியது. பின், என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு கொடுத்து என்னை சென்னை அனுப்பி வைத்தார்கள். 1949இல் முதன்முறையாக சென்னைக்கு வந்தேன். அப்போது வாகினி ஸ்டூடியோவில்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி படங்களும் எடுப்பார்கள். நான் அங்கு சென்றபோது சௌகார் என்று ஒரு படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். சென்னை வந்த முதல் நாளிலேயே துணை நடிகர் ஒருவருடைய அறிமுகத்தைப் பெற்றுவிட்டேன். மறுநாள் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர் கூறினார். அன்று இரவு பாண்டிபஜாரில் இருந்த ஒரு பிளாட்பாரத்தில் ஓரமாக படுத்துக்கொண்டேன். நடு இரவில் திடீரென போலீஸ் ரைடு வந்து பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர்களை எல்லாம் வண்டியில் ஏற்றினார்கள். அங்கிருந்து சிலர் தப்பித்து ஓடுகையில், நானும் தப்பித்து ஓடிவிட்டேன். பின், அந்த ஏரியாவில் இருந்த ஒரு ஓட்டலின் பின்புறத்தில் எச்சி இலை போடும் இடத்திற்கு பக்கத்தில் போய் ஒளிந்துகொண்டேன். போலீசுக்கு பயந்து விடியவிடிய அங்கேயே உட்கார்ந்திருந்தேன். மறுநாள் ஸ்டூடியோவிற்கு சென்றேன். வாசலில் நின்று ஒருவர் நடிக்க வாங்க... நடிக்க வாங்க என்று கூப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னடா இப்படி கூவிக்கூவி கூப்பிடுறாங்க... இது தெரியாம நாம லெட்டர் எழுதிக்கிட்டு இருந்திருக்கோமே... நடிக்க வாய்ப்பு கிடைப்பது ரொம்ப ஈஸியோ... என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே வரிசையில் போய் நின்று கொண்டேன்.

 

வரிசையில் நின்ற அனைவருக்கும் டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள். நான் டோக்கன் கவுன்டருக்கு அருகே செல்லும்போது டோக்கன் முடிந்துவிட்டது என்று கூறி கவுண்டரை மூடிவிட்டனர். அடுத்து எப்போது வரவேண்டும் என்று கேட்டேன். அதெல்லாம் தெரியாது... இப்ப இடத்தை காலி பண்ணு... என்று கூறி அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்துவிட்டனர். எனக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் மாடர்ன் தியேட்டர் நினைவுக்கு வந்தது. அங்கு நேரில் சென்று வாய்ப்பு கேட்டு பார்ப்போம் என்று முடிவெடுத்து மாடர்ன் தியேட்டருக்குச் சென்றேன். அங்கு ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அதுபற்றி அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்