Skip to main content

காரை அடித்து நொறுக்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்கள்... இயக்குநருக்கு பாதுகாப்பு கொடுத்த அண்ணா!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் கார் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எடுத்த ‘பணமா பாசமா’ திரைப்படம் மதுரை தங்கம் தியேட்டரில் வெளியாகி நூறு நாட்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். நூறாவது நாள் வெற்றிவிழாவிற்கு மதுரை தங்கம் திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இயக்குநர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ‘ஆதிபராசக்தி’, ‘தசாவதாரம்’, ‘நத்தையில் முத்து’, ‘வாழையடி வாழை’ உட்பட 7 படங்களுக்கு நான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். அந்த நேரத்தில்தான் இந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். நூறு நாள் வெற்றி விழாவில் கோபாலகிருஷ்ணன் பேசியது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.

 

பொதுவாகவே கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மிகவும் உணர்ச்சிவசப்படுவார். அவர் படங்களில் மட்டுமல்ல அவரது பேச்சிலும் உணர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி விழாவில் பேசுகையில், வசூல் சக்கரவர்த்தியின் படங்களை எல்லாம் என் படம் முறியடித்துவிட்டது எனக் கூறிவிட்டார். அந்தக் காலக்கட்டங்களில் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டும்தான். கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சு எம்.ஜி.ஆர். ரசிகர்களைக் கோபப்படுத்தியது. அவர் சென்னையிலிருந்து மதுரைக்குக் காரில்தான் வந்திருந்தார். தங்கம் திரையரங்கிற்கு வெளியே அவரது கார் நின்றுகொண்டிருந்தது. விழா முடிந்து வெளியே வந்த கோபாலகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி. காரணம், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவர் காரை அடித்து நொறுக்கியிருந்தனர். “உங்கள் படத்தை மட்டும் பாராட்டிப் பேச வேண்டியதுதானே... எம்.ஜி.ஆரை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஏன் பேசுனீர்கள்” எனக் கூறிய அந்தத் திரையரங்க உரிமையாளர், கோபாலகிருஷ்ணன் சென்னை செல்வதற்காக ஒரு கார் ஏற்பாடு செய்துகொடுத்தார். மேலும், அந்தக் காரில் சென்னை கிளம்பிய கோபாலகிருஷ்ணனிடம் வழியில் எங்கும் நிற்க வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பிவைத்தார். கோபாலகிருஷ்ணனுக்கு தட்ஷணமூர்த்தி என்று உதவியாளர் ஒருவர் இருந்தார். சில படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். அவரிடம், தான் அப்படி பேசியது தவறுதான் என்றும் தற்போது தனக்கு மனசு சரியில்லை. அதனால் சில நாட்கள் எங்காவது வெளியே  சென்றுவிட்டு வருவோமா எனக் கேட்டுள்ளார். அவரும் சரி எனக் கூற இருவரும் குற்றாலம் கிளம்பிச் செல்கின்றனர்.

 

மறுநாள் காலை குற்றாலத்தில் அருவியில் குளித்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது நல்ல திடமான உடல்வாகு கொண்டு இருவர் சற்று தொலைவில் இருந்து இவர்களையே பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். இங்கேயும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் வந்துவிட்டார்களோ என நினைத்து கோபாலகிருஷ்ணனுக்கு பயம் தொற்றிக்கொண்டது. இருவரும் பெரிய மீசை வைத்திருந்ததைப் பார்த்தவுடன் இவர்கள் மதுரைக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என அவராக நினைத்துக்கொண்டார். “காரை அடித்து நொறுக்கியதற்கு நான் கம்ப்ளைண்ட் கூட கொடுக்கல. ஆனாலும், இவனுக என்னைத் துரத்தி வர்ரானுகளே” என உதவியாளர் தட்ஷணாமூர்த்தியிடம் கூறுகிறார். “நான் இங்கேயே இருக்கிறேன்... நீ போய் காரை எடுத்துட்டு வா... கார் பக்கத்தில் வந்ததும் நான் ஓடி வந்து ஏறிக்கொள்கிறேன்... வேகமாக லாட்ஜுக்கு போயிரலாம்” என உதவியாளரிடம் கூறுகிறார். அவரும் காரை எடுத்துக்கொண்டு வருகிறார். கார் அருகில் வந்ததும் கோபாலகிருஷ்ணன் ஓடிச்சென்று காரில் ஏறி உட்கார்ந்துகொள்கிறார். நினைத்தபடி பாதுகாப்பாக லாட்ஜிற்கு வந்திறங்கியதில் கோபாலகிருஷ்ணனுக்கு சந்தோசம். பின்பு, சிறிது நேரம் கழித்து ஜன்னல் வழியாகப் பார்க்கையில் இருவரும் லாட்ஜிற்கு அருகே நின்றுகொண்டிருந்தனர். “இவனுக ஒரு முடிவோடுதான் வந்திருக்கானுக போலடா... அவர் அன்னைக்கு தெரியாம பேசிட்டாரு... அதுக்கு நீங்க அவர் காரை உடைச்சுட்டிங்க... இன்னும் ஏன் பின்னாடியே துரத்துறீங்க... அவர் பேசுனதுக்கு மன்னிப்பு கேட்பதாகக் கூறுகிறார் என்று அவர்களிடம் போய் நீ கூறு” என தட்ஷணாமூர்த்தியை அனுப்பிவைக்கிறார். நேரே அவர்களை நோக்கிச் சென்ற தட்ஷணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் கூறியதை அப்படியே கூறி அவர்களை அங்கிருந்து கிளம்பும்படி கூறுகிறார். 

 

அவர்கள் உடனே, “சாரி சார் எங்களை மன்னிச்சுருங்க... நாங்க ரவுடி இல்லை... அண்ணா அனுப்பிவைத்த உளவுத்துறை ஆட்கள். முதல்வர் அண்ணா அவர்கள்தான் கோபாலகிருஷ்ணன் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் பாதுகாப்புக்குச் செல்லுங்கள் என எங்களை அனுப்பிவைத்தார்” என தட்ஷணாமூர்த்தியிடம் கூறியுள்ளனர். உதவியாளர் தட்ஷணாமூர்த்தி இந்த விவரத்தைக் கோபாலகிருஷ்ணனிடம் சென்று கூறுகிறார். அதைக் கேட்டு கோபாலகிருஷ்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம், தன்னுடைய கார் அடித்து நொறுக்கப்பட்டவுடன் அண்ணாவைச் சென்று சந்தித்துள்ளார் கோபாலகிருஷ்ணன். அந்தச் சந்திப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கட்டுமா எனக் கோபாலகிருஷ்ணன் கேட்க, அண்ணா அதை அப்படியே விடுங்கள் எனக் கூறியுள்ளார். அதனால், கோபாலகிருஷ்ணனுக்கு அண்ணா மீது கொஞ்சம் அதிருப்தி இருந்தது. குற்றாலத்தில் இருந்து கிளம்பிய கோபாலகிருஷ்ணன் வண்டியை நேராக அண்ணா வீட்டிற்குவிட்டார். அண்ணாவை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி சொன்னபிறகுதான் கோபாலகிருஷ்ணனுக்கு மனம் நிம்மதியடைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்