Skip to main content

இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த இயக்குநரின் மகன்... தந்தை இடத்திலிருந்து உதவிய எம்.ஜி.ஆர்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மகனின் சிகிச்சைக்கான செலவை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் கார் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் அடித்து நொறுக்கப்பட்டது குறித்தும் அதன்பிறகு கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு முதல்வர் அண்ணா உளவுத்துறை ஆட்கள் மூலம் பாதுகாப்பு கொடுத்தது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். தனக்கு பாதுகாப்பு கொடுத்த அண்ணாவிற்கு நன்றி தெரிவிப்பதற்காக கோபாலகிருஷ்ணன் அறிஞர் அண்ணா வீட்டிற்கு நேரில் வந்தார். தனக்கு நன்றி கூற வந்த கோபாலகிருஷ்ணனிடம் முதல்வர் அண்ணா ஒரு கோரிக்கை வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்களின் கோபத்தைத் தணிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. நீங்கள் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுக்கவுள்ளதாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துவிடுங்கள் என்றார். அந்த யோசனை கோபாலகிருஷ்ணனுக்கு சரியாகப்பட்டது. இவ்வாறு விளம்பரம் கொடுத்தால் எம்.ஜி.ஆர் எப்படி எடுத்துக்கொள்வார் என்று அவருக்குத் தயக்கமாக இருந்தாலும், அண்ணா கூறியதால் தைரியமாக தினத்தந்தியில் ஒருபக்க விளம்பரம் கொடுக்கிறார். மறுநாள் பத்திரிகையில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்கும் 'தங்கத்திலே வைரம்' என்று முழு பக்க விளம்பரம் வெளியானது. உடனே ரசிகர்கள், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘வாழ்க வாழ்க’ என்று ஸ்டூடியோவில் வந்து முழக்கம் போட ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகுதான், கோபாலகிருஷ்ணனுக்கு நிம்மதியே வந்தது. 

 

இந்த நேரத்தில், அவரது ‘பணமா பாசமா’ திரைப்படம் ரஷ்யாவில் ஒரு திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக அவர் ரஷ்யா கிளம்ப வேண்டும். அந்தக் காலத்தில் குடும்பக் கதைகளாக எடுத்து அதிக வெற்றிப்படங்கள் கொடுத்தவர் என்றால் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். தொடர்ந்து 10 படங்களுக்கும்மேல் வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார். கோடீஸ்வரியின் மகள் அவர்கள் வீட்டு வாட்ச்மேனின் மகனைக் காதலித்துவிடுவாள். வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் வாட்ச்மேனின் மகனைக் கூட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவாள். அதன் பிறகு, என்ன நடந்தது என்பதுதான் ‘பணமா பாசமா’ திரைப்படத்தின் கதை. இது கம்யூனிச சிந்தனைகொண்ட கதைக்களம் என்பதால் ரஷ்யாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்காக அவர் ரஷ்யா கிளம்பும் விஷயம் தெரிந்ததும் வீனஸ் காலனியில் இருந்த அவர் வீட்டில் ஒட்டுமொத்த திரையுலகினருமே திரண்டுவிட்டனர். நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கி அனைவரும் நேரில் வந்து மாலையணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அனைவரும் கிளம்பிய பிறகு அந்த வீடு முழுக்க மாலையாக இருந்தது. அன்று மாலையே அவர் டெல்லி வழியாக ரஷ்யா செல்கிறார். அவர் ரஷ்யா சென்றிருந்த நேரத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது.

 

கோபாலகிருஷ்ணனுக்கு மொத்தம் 6 குழந்தைகள். மாடியில் இருந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்த அவரது மூன்றாவது மகன் குமார் எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி விழுந்துவிடுகிறார். இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததால் எலும்பு உடைந்து அவரது உடம்பில் பலத்த அடி ஏற்படுகிறது. அதன் பிறகு, அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிரமாக சிகிச்சை அளிக்கின்றனர். இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவருகிறது. உடனே, மருத்துவமனைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவர்களை அழைத்து, ‘இவனுக்கு எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை... யார்கிட்டயும் கேட்காதீங்க... மொத்த பணமும் நான் தாரேன்... அவன் குணமாக வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்றார். அன்றைய காலத்தில் லட்சம் என்றால் இன்றைய மதிப்பில் பல கோடிகள். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையினால் உயிருக்கு ஆபத்தில்லை என்ற கட்டத்தை குமார் அடைகிறான். அந்த சிகிச்சைக்கான மொத்த செலவையும் எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார். 

 

ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்புகிறார் கோபாலகிருஷ்னன். ரஷ்யாவில் நடந்த விஷயங்கள், தனக்கு கிடைத்த பாராட்டுகள் குறித்தெல்லாம் தன்னுடைய மனைவியிடம் கூறிக்கொண்டிருக்கையில், தன்னுடைய மகன் குமார் அங்கு இல்லாததைக் கவனிக்கிறார். குமார் எங்கே என்று அவர் கேட்க, அவர் மனைவிக்குச் சொல்ல தைரியமில்லை. பின், அவரது உதவியாளர் தட்ஷணாமூர்த்திதான் நடந்ததை விளக்கிக் கூறுகிறார். நடந்தது என்ன என்று அவர் சொல்லி முடித்ததும் கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் உள்ள மகனைக்கூட சந்திக்கச் செல்லவில்லை. நேராக எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்ற கோபாலகிருஷ்ணன், அவரது கையைப் பிடித்து அழுதுவிட்டார். ‘ஒரு தகப்பன் இடத்தில் இருந்து என் மகனுக்கு உதவி செய்துள்ளீர்கள்’ என்று கண்ணீர்விட்டு அழுத கோபாலகிருஷ்ணனை, ‘என்ன கே.எஸ். சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டிருக்கீங்க’ என்று கூறி எம்.ஜி.ஆர் தேற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்