Skip to main content

தேவரை எச்சரித்த திமுக தரப்பு... பணத்திண்டாட்டத்துடன் இடைத்தேர்தலை எதிர்கொண்ட எம்.ஜி.ஆர்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

mgr

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், திண்டுக்கல்லில் நடைபெற்ற இடைத்தேர்தலை எம்.ஜி.ஆர் எதிர்கொண்டது குறித்தும் அந்த நேரத்தில் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத்தேவருக்கு வந்த எச்சரிக்கை குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எம்.ஜி.ஆரை திமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள். அங்கிருந்து வெளியே வந்தவர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அந்த சமயத்தில் திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தல் ஓர் அரசியல்வாதியாகத் தன்னைப் பரிசோதனை செய்துகொள்ளக்கூடிய தேர்தலாக எம்.ஜி.ஆருக்கு இருந்தது. தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக அந்தத் தேர்தல் இருந்ததால் மிகுந்த கவனத்தோடு அந்தத் தேர்தலுக்குத் தயாரானார் எம்.ஜி.ஆர். அதிமுக சார்பாக மாயத்தேவர் நிறுத்தப்படுகிறார். அந்தத் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக பெரும்பலத்துடன் இருந்தது.

 

நான் உட்பட எங்கள் கதை விவாதக்குழுவினர் அனைவரும் சாண்டோ சின்னப்பத்தேவரின் படக்கம்பெனியில் ஒரு கதை விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த உதவியாளர் வேகமாக ஓடிவந்து எம்.ஜி.ஆர் வருவதாகக் கூறினார். மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்த பிறகு, எந்தப் படக்கம்பெனிக்கும் எம்.ஜி.ஆர் நேரில் சென்றதில்லை. படம் குறித்து ஏதாவது பேசவேண்டுமென்றால் அவர்கள்தான் எம்.ஜி.ஆரை தேடிவருவார்கள். எம்.ஜி.ஆர் வருவது தேவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஆளுயர மாலையுடன் வந்த எம்.ஜி.ஆர், அதை தேவர் கழுத்தில் போட்டார். பின் தேவரிடம் தனியாகப் பேசவேண்டும் என எம்.ஜி.ஆர் கூற, எங்களை வெளியே இருக்கும்படி தேவர் கூறினார். நாங்கள் வெளியே வந்ததும் உள்ளே கதவைப் பூட்டிக்கொண்டு எம்.ஜி.ஆரும் தேவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திண்டுக்கல் இடைத்தேர்தலில் தன்னுடைய சார்பாக ஒருவரை நிறுத்தியுள்ளதாகவும், தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு படத்தை வெளியிடவேண்டும் எனத் தேவரிடம் எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதற்கான கதை தன்னிடம் இருப்பதாகவும் குறுகிய காலத்திலேயே படம் எடுக்கவேண்டுமென்றால் அது தேவரால்தான் முடியும் என்பதால் உங்களிடம் இந்த உதவியை கேட்டு வந்துள்ளதாகவும் எம்.ஜி.ஆர் கூறினார். எனக்கான ஒரு நன்றிக்கடனாக இந்தப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதால் தேவரும் சம்மதித்துவிடுகிறார். படத்திற்கான கதையை சிறிது நேரத்தில் ஒருவரிடம் கொடுத்துவிடுவதாகக் கூறி எம்.ஜி.ஆர் அங்கிருந்து கிளம்புகிறார். உடனே தேவர் எங்கள் அனைவரையும் உள்ளே அழைக்கிறார். 'இப்ப வேலை பார்த்த கதையெல்லாம் தூக்கி வச்சுருங்கடா... எம்.ஜி.ஆர் இப்ப ஒரு கதை கொடுத்துவிடுவாரு அதைத்தான் படமா எடுக்க போறோம்... 10 நாள்ல படத்தை முடிக்கணும்' எனத் தேவர் எங்களிடம் கூறினார்.   

 

Kalaignanam

 

கொஞ்ச நேரத்தில் தேவருக்கு ஒரு ஃபோன் வந்தது. தேவர் ஃபோனை எடுத்து ஹலோ என்கிறார். 'நான் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன்... உங்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுகிறேன்... உங்களுக்கு நாங்கள் வேண்டுமா, எம்.ஜி.ஆர் வேண்டுமா என முடிவு செய்துகொள்ளுங்கள்' என மறுமுனையில் இருந்து ஒருவர் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகிறார். தேவருக்கு ஒரே குழப்பம். நேராக எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறினார். கொஞ்ச நேரம் யோசித்த எம்.ஜி.ஆர், 'அண்ணே இது சரியானதும்கூட; எனக்குக்கூட அந்த யோசனை வரவில்லை பாருங்க; ஒரு வியாபாரி எந்த சார்பும் இல்லாமல் இருக்கணும்; அதுதான் வியாபாரிக்கு நல்லது; என் சார்பாக நீங்கள் வந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு படம் எடுப்பதில் பிரச்சனை வரும்; இந்தப்படத்தை நீங்கள் எடுக்கவேண்டாம்; நான் பார்த்துக்கொள்கிறேன்' எனக் கூறிவிடுகிறார். உடனே தேவரும் கிளம்பிவந்துவிடுகிறார். ஆனால், தேவருக்கு மனசே சரியில்லை. தேர்தலில் நிற்கிற எம்.ஜி.ஆருக்கு ஏதாவது ஒருவகையில் உதவவேண்டும் என யோசித்து இரவோடு இரவாக ஒரு பண்டலில் பணத்தை கட்டி எடுத்துக்கொண்டு சென்று எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார். அதேபோல தேர்தல் செலவிற்காக ஜேப்பியார் 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார். இருப்பினும் தேர்தல் செலவிற்கு இதுவெல்லாம் போதவில்லை. பின், நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுத நாயர், பெரிய அளவில் பணம் கொடுத்து உதவினார். இப்படியெல்லாம் சிக்கல்களை  எதிர்கொண்டு தேர்தலைச் சந்தித்த எம்.ஜி.ஆர் தரப்பு தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த சட்டமன்றத்தேர்தலில் தமிழகமெங்கும் போட்டியிட்ட எம்.ஜி.ஆரின் அதிமுக பெரிய அளவில் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார்.

 

  

சார்ந்த செய்திகள்