Skip to main content

"பிரதமர் மோடிக்கு இந்த ஆலோசனை தோன்றியதை எண்ணி வியந்து கொண்டிருக்கிறேன்..." - இளையராஜா

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

ilaiyaraja speech at kasi tamil sangam event

 

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இன்று (19/11/2022) மதியம் நடந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

ad

 

பின்பு மேடையில் பேசிய இளையராஜா எம்.பி., "காசி நகருக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை இங்கே அனைவரும் விளக்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பாரதியார் இங்கே இரண்டு வருடம் படித்திருக்கிறார். இங்கே படித்து அவர் கற்றுக்கொண்ட விஷயங்களில், புலவர் பெருமக்கள் உரையாடியதை அவர்கள் விவாதத்தில் பங்கு கொண்டதை எல்லாம் நேரிலே பார்த்திருந்து 'காசி நகர் புலவர் இங்கே செய்யும் பேச்சுக்களில் காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம்' என்று இந்தியாவிற்கு எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத நேரத்திலே அவர் அந்த பாடலை பாடியிருக்கிறார். 'கங்கை நதி புறத்து கோதுமை பண்டம், காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்' என்றும் வங்கத்தின் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்தின் நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் வருவதற்கு முன்பே தனது 22 வயதில் பாடிவிட்டுப் போய் விட்டான். அப்படியான பாரதியார் தனது 9 வயது முதல் 11வயது வரை இரண்டு ஆண்டுகள் இங்கே  இருந்து பயின்று அவர் அறிவு பெற்றிருக்கிறார் என்பது தமிழக பெருமக்களுக்கு அறிய விஷயமாகும். அதே போல் இங்குக் குறிப்பிடப்படாத விஷயம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 

 

கபீர் இரண்டு அடிகளில் பாடினார். அங்கே தமிழில் திருவள்ளுவர் திருக்குறளை என்ற நூலை இரண்டே அடிகளில் எழுதினார். கபீர் பாடியதில் 8 சீர்கள் அமைந்திருக்கின்றன. திருக்குறளில் 7 சீர்கள் தான். முதல் அடி நான்கு சீர், இரண்டாம் அடி மூன்று சீர். இந்த நிகழ்வுகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு அடிகளில் பாடிய கபீர் தாஸ் ஆன்மீகம் பற்றிப் பாட, திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பால்களாக அதை 1330 பாடல்களாக எழுதினார். 

 

இன்னொரு விஷயத்தை யாரும் குறிப்பிடாத விஷயத்தைச் சொல்கிறேன், கர்நாடக சங்கீதத்தின் மாமேதை என்று போற்றக்கூடிய மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் இங்கே வந்து நிறைந்து பல பல இடங்களில் தேசாந்திரமாகப் பாடிக் கொண்டு சென்றவர். கங்கை நதிகளில் மூழ்கி எழும்போது அவர் கையிலே சரஸ்வதி தேவி வீணையைப் பரிசளித்திருக்கிறார். அந்த வீணை இன்னும் இருக்கிறது. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த இந்த காசி நகரிலே தமிழ்ச் சங்கமத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமர் அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்பதை  நான் மிகவும் வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். மேலும் இந்த ஆலோசனை தோன்றியதற்காக உங்களை எண்ணி மகிழ்கிறேன்." என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்