இந்தியில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமான ஹன்சிகா, கதாநாயகியாக தமிழ், தெலுங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இப்போது 'மேன்', காந்தாரி, ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் உள்ளிட்டவைகளை கைவசம் வைத்துள்ளார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் அதே 2022ஆம் ஆண்டு அவரது மனைவியான சின்னத்திரை நடிகை முஸ்கானை பிரிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து தற்போது முஸ்கான் பிரசாந்த், ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், பிரசாந்த் தன் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஹன்சிகா மற்றும் அவரது தாயார் தன்னுடைய திருமண உறவில் தலையிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் மூவரும் விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் பணத்தைக் கேட்பதாகவும் சொத்து சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.
முஸ்கானின் புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா, அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.