Skip to main content

"டீசரை பார்த்த மிரட்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை" - மட்டி படம் குறித்து இயக்குநர் பேரரசு கருத்து 

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

director perarasu talk about muddy movie

 

இந்தியாவில் மண் சாலை ரேஸை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் படம் மட்டி. அறிமுக இயக்குநர் பிரகபல் இயக்கும் இப்படத்தை கே 7 கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கில் நடிக்கின்றனர்.  கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூப்  மட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

ad

 

இந்நிலையில் மட்டி திரைப்படத்தை இயக்குநர் பேரரசு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்," மட்டி படத்தின் டீசரை பார்த்த மிரட்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. இது போன்ற பிரம்மாண்டமான ,மிரட்டலான ஒரு படத்தின் டீசரைப் பார்த்து நீண்ட நாளாகி விட்டது.  நான் சிறிய வயதில் 70 எம் எம் திரையில் ‘ஷோலே’ படத்தின் ட்ரைலரைப் பார்த்துப் பிரமித்தேன். அதேபோல் தமிழில் ‘ஊமை விழிகள்’ படத்தின் ட்ரைலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதன்பிறகு‘ மட்டி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து  மிரண்டேன். மட்டி என்றால் மண் என்றார்கள். இது மண் அல்ல வைரம், வைடூரியம், பிளாட்டினம்  என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது போன்ற படங்கள்தான் அதிகம் வர வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் 10மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

Next Story

“டாஸ்மாக்கில் ‘கள்’ விற்கலாம்; அது நல்லது” - இயக்குநர் பேரரசு

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

perarasu latest speech

 

நந்தா லட்சுமணன் இயக்கத்தில் வேல்முருகன் தயாரிப்பில் பிரதீப் செல்வராஜ், அபிநயா, ஏ.ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெடுமி'. பனைமரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.  

 

இயக்குநர் பேரரசு பேசும்போது, "நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன். தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பனைமரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனைமரத்திற்குண்டு. பனைமரத்தில்தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம்  நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால், நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனைமரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள். இப்படிப்பட்ட பனைமரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

 

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும், அவ்வளவுதான். உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால், இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள். உடலைக் கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்" என்றார். 

 

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது, "இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல், அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம். ஒருவரிடம் திறமை இருக்கலாம். அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது. அவன் தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக்கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்" என்றார்.