தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 3 பாகமாக உருவாகும் 'வட சென்னை' படம் வரும் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது இப்படம் குறித்தும், நடிகர் சிம்பு குறித்தும் நடிகர் தனுஷ் பேசும்போது.... "பொல்லாதவன்' படம் முடியும் தருவாயிலேயே நாங்கள் 'வட சென்னை' ஸ்க்ரிப்டை தயாராக வைத்திருந்தோம். அனால் அந்த சமயத்தில் இப்படம் பண்ணால் சரியாக இருக்காது என நானும், வெற்றிமாறனும் தள்ளிப்போட்டுவிட்டோம். மேலும் படத்தின் கதை பெரியது என்பதாலும், ஒரே பாகமாகவும் எடுக்க முடியாது என்பதாலும் கைவிட்டோம். அதன் பின் நாங்கள் ஆடுகளம் செய்தோம். பின் மீண்டும் வட சென்னை படத்தை எடுக்கலாம் என நினைத்த போது, நானும் வெற்றியும் தொடர்ந்து பண்ண வேண்டாம் என முடிவெடுத்து இந்த தடவையும் இப்படத்தை தள்ளிப்போட்டோம்.
பின் ஒரு நாள் வெற்றி எனக்கு போன் செய்து இப்படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறினார். நானும் பெருந்தன்மையாக சரி என சொல்லி விட்டுவிட்டேன். பின் இன்னொரு நாள் எனக்கு போன் செய்த வெற்றிமாறன் இப்படத்தில் அமீர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க கேட்டார். அதற்கு நான், எனக்கு பெருந்தன்மை இருக்கு சார். ஆனால் அவ்வளவு பெருந்தன்மை இல்லை. நானும் மனுஷன் தான். நான் பண்ணமாட்டேன் என கூறிவிட்டேன். பின் சில காலம் கழித்து இந்த கதை சுற்றி சுற்றி மறுபடியும் என்னிடமே வந்தது. பிறகு சரி, இந்த படத்தை இப்போதே ஆரம்பிப்போம் என ஆரம்பித்து படத்தின் முதல் பாகத்தை முடித்துவிட்டோம். இதன் அடுத்த பாகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளோம்" என்றார்.